இருசக்கர வாகன உதிரிபாகங்கள் கடையில் நூதன திருட்டு: ஈரான் நாட்டு தம்பதி கைது


இருசக்கர வாகன உதிரிபாகங்கள் கடையில் நூதன திருட்டு: ஈரான் நாட்டு தம்பதி கைது
x
தினத்தந்தி 20 March 2020 5:00 AM IST (Updated: 20 March 2020 1:17 AM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகன உதிரிபாகங்கள் கடையில் நூதன முறையில் ரூ.10 ஆயிரம் திருடிய ஈரான் நாட்டு தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கொடிமரத்துமூலை பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது62). இவர் அந்த பகுதியில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். கடந்த 16-ந் தேதி மதியம், 2.45 மணிக்கு இவருடைய கடைக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு தம்பதி காரில் வந்தனர்.

அவர்களில், பெண் நபர் கடையின் வெளியே நின்றுகொண்டிருக்க, கடையின் உள்ளே சென்ற ஆண் நபர், பார்த்தசாரதியிடம், நாங்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இந்தியாவிற்கு முதன்முறையாக வந்துள்ளோம். இந்திய நாட்டின் ரூபாய் மதிப்புகள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், ரூ.2 ஆயிரம் எப்படி இருக்கும் எனவும் கேட்டார்.

திருட்டு

இதை நம்பிய பார்த்தசாரதி தன்னிடம் இருந்த 30 ஆயிரம் ரூபாய் கட்டை எடுத்து காண்பித்து விளக்கினார். அதை வாங்கி பார்த்த அந்த வெளிநாட்டு நபர், தனது மணிபர்சை ரூபாய் நோட்டுகள் மீது வைத்து அதில் இருந்து ரூ.10 ஆயிரத்து 500-யை நூதனமாக திருடிச் சென்றுவிட்டார். பின்னர் அவர் பர்சை எடுத்துக்கொண்டு ரூபாய் நோட்டு கட்டை பார்த்த சாரதியிடம் கொடுத்து விட்டு, அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.

கடையின் வியாபாரம் முடிந்த பிறகு, பார்த்தசாரதி கணக்கை சரிபார்த்தபோது ரூ.10 ஆயிரத்து 500 குறைந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடையில் உள்ள சி.சி.டி.வி.கேமராவை பார்த்த போது, வெளிநாட்டை சேர்ந்தவர் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பார்த்தசாரதி தஞ்சை மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

மேலும் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வமணி, பழனியாண்டி, ஏட்டுகள் மோகன், நிறைமதி ஆகியோர் வெளிநாட்டு தம்பதியை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று தஞ்சை தெற்குஅலங்கம் பகுதியில் வெளிநாட்டு தம்பதியினர் சுற்றி கொண்டு இருப்பதை அறிந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள், ஈரான் நாட்டின் தெகரான் நகரை சேர்ந்த அலிஜாபர்(57), இவரது மனைவி மர்ஜான்(46) என்பதும், இவர்கள் தான் பார்த்தசாரதியிடம் பணம் திருடியதும் தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் மருத்துவமனையில் இவர்களை அனுமதித்து கண்காணிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியதை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story