வலம்புரிவிளையில் 4-வது நாளாக எரியும் தீ: நச்சு புகையால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல்


வலம்புரிவிளையில் 4-வது நாளாக எரியும் தீ: நச்சு புகையால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல்
x
தினத்தந்தி 19 March 2020 11:00 PM GMT (Updated: 19 March 2020 8:44 PM GMT)

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 4-வது நாளாக எரியும் தீயால் உருவான நச்சு புகை காரணமாக பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் கடந்த 16-ந் தேதி தீ பற்றியது. இதைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் முழுமூச்சுடன் ஈடுபட்டனர். எனினும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குப்பை குவியலின் அடிப்பகுதி வரை தீ பரவி இருப்பதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகிறார்கள்.

இந்த நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று 4-வது நாளாக தீ எரிந்தது. இதைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். 5 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் குப்பைகளை கிளறிவிட்டு தீயணைக்கும் பணி நடந்தது. நாகர்கோவில், தக்கலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்தன.

மூச்சு திணறல்

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தொடர்ந்து தீ எரிந்து வருவதால் அப்பகுதி நச்சு புகையால் சூழப்பட்டுள்ளது. 4 நாட்களாக நச்சு புகையால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களில் சிலருக்கு நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்பு வீரர்களும் நச்சு புகையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நோய் தொற்று ஏற்படுவதற்குள் குப்பை கிடங்கில் எரியும் தீயை உடனே அணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story