தொப்புள் கொடிக்கு பதிலாக பெண்ணின் குடலை அறுத்தார் ‘யூடியூப்’ வீடியோ பார்த்து கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலன் குழந்தையின் கை துண்டாகி இறந்த பரிதாபம்
யூடியூப் வீடியோ பார்த்து கல்லூரி மாணவிக்கு காதலனே பிரசவம் பார்த்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர் (வயது 27). இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் சமையல் கியாஸ் சிலிண்டர் ஏஜென்சியில் வேலை செய்து வருகிறார்.
இவரும், அதே பகுதியை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி ஒருவரும் சுமார் 2 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்த காதலுக்கு சவுந்தரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதை பொருட்படுத்தாமல் காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்தனர்.
இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். இதை அவர் தனது பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார். 8 மாதங்கள் ஆனதால் வயிறு பெரிதாக தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த மாணவி, தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு சவுந்தரை வற்புறுத்தி வந்தார்.
முந்திரி காட்டில் விபரீதம்
இதனால் கல்லூரி மாணவியின் வயிற்றில் இருக்கும் கருவை எடுக்க சவுந்தர் திட்டமிட்டார். இதற்காக அவர் யூடியூப் இணையதளத்தில் சில வீடியோக்களையும் பார்த்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்த படுபாதக செயலை செய்வதற்காக நேற்று முன்தினம் அவர் தனது காதலியை கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திகுப்பம் ரெயில்வே மேம்பாலம் அருகே வரச்சொல்லி செல்போனில் தகவல் தெரிவித்தார்.
காதலன் சவுந்தரின் அழைப்பை ஏற்று அங்கு வந்த மாணவியை கட்டாயப்படுத்தி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈகுவார்பாளையம் பகுதியில் உள்ள முந்திரி காட்டுக்கு சவுந்தர் சென்றார். ஆள்நடமாட்டம் இல்லாத அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு புதர் அருகே மாணவியை படுக்க வைத்து கையுறை அணிந்து கொண்டு அவருக்கு சவுந்தர் பிரசவம் பார்த்தார்.
குழந்தையின் கை துண்டானது
முதலில் அவர் கையால் குழந்தையின் கையை பிடித்து இழுத்தார். வலுவாக இழுத்ததால் குழந்தையின் ஒரு கை மட்டும் துண்டானது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த சவுந்தர், துண்டான குழந்தையின் கையை காட்டுப்பகுதியிலேயே வீசியதாக கூறப்படுகிறது.
அத்துடன் நில்லாமல் குழந்தையை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என நினைத்து தொப்புள் கொடியை அறுக்க முயன்றபோது மாணவியின் குடல் அறுபட்டு அதிக அளவு ரத்த போக்கு ஏற்பட்டு அவர் அலறி துடித்தார்.
இதனால் நிலைமை விபரீதம் ஆனதை உணர்ந்த சவுந்தர், மாணவியை மோட்டார் சைக்கிளிலேயே அமர வைத்து அங்கிருந்து சுமார் 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சை
அங்கு மாணவிக்கு அறுவை சிகிச்சை மூலம் இறந்த நிலையில் ஆண் குழந்தை எடுக்கப்பட்டது. மேலும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் இருந்த போலீசார் இது பற்றி தகவல் அறிந்தவுடன் சவுந்தரை மடக்கிப்பிடித்து கும்மிடிப்பூண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சம்பவ இடமான முந்திரி காட்டு பகுதிக்கு சவுந்தரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு அவர் சம்பவம் தொடர்பாக நடித்து காட்டினார். அங்கு ரத்த கறைகளுடன் இருந்த துணிகளையும், முக்கிய தடயங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
மேலும் சென்னை ராயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கும் போலீசார் நேரடியாக சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவியிடமும் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பெற்றனர். அப்போது, தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சவுந்தர் கர்ப்பமாக்கியதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி முந்திரி காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பிரசவம் பார்த்ததாகவும் அவர் கூறியதாக தெரிகிறது.
காதலன் கைது
இதைத்தொடர்ந்து இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து காதலன் சவுந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது மகள் 8 மாத கர்ப்பமாக இருந்தது தனக்கு தெரியாது என மாணவியின் தாயார் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
8 மாத கர்ப்பிணியான கல்லூரி மாணவிக்கு யூடியூப் வீடியோ பார்த்து காதலனே பிரசவம் பார்த்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story