கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் கலெக்டர் ஆலோசனை


கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து   தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 20 March 2020 4:15 AM IST (Updated: 20 March 2020 2:42 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பாக கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து காஞ்சீபுரம் மாவட்ட தொழிற்சாலை பிரதி நிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து தொழிற்சாலை பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கிருமி நாசினி கொண்டு...

இந்த கூட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு அன்றாடம் வரும் பணியாளர்கள் அனைவருக்கும் கை கழுவும் திரவத்தை கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ளும் முறை குறித்து அறிவுறுத்தவும், தடுப்பு நடவடிக்கையாக தொழிற்சாலைகளில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளவும், தொழிற்சாலைகளில் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்ப கருவிகளில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும் தொழிற்சாலை பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் தொழிற்சாலையில் உள்ள உணவகங்கள், கலந்தாய்வு கூடங்கள் மற்றும் பணியாற்றும் இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், சுற்றுச்சூழல் ஆய்வாளர் சசிகுமார், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) ஜீவா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story