கொரோனா வைரஸ் எதிரொலி: கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது தேவாலயங்களில் 31-ந் தேதி வரை ஆராதனைகள் நிறுத்தம்


கொரோனா வைரஸ் எதிரொலி: கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது தேவாலயங்களில் 31-ந் தேதி வரை ஆராதனைகள் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 March 2020 5:00 AM IST (Updated: 20 March 2020 2:53 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் எதிரொலியால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. மேலும் தேவாலயங்களில் அனைத்து ஆராதனைகளும் வருகிற 31-ந் தேதி வரை நிறுத்தப்பட்டு உள்ளன.

ஊட்டி,

இந்தியாவில் கொரோனா வைரசால் 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுரைப்படி, தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் அதிக மக்கள் சேர்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் இருக்க வேண்டும். அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் திருப்பலி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆராதனை உள்பட அனைத்து ஆராதனைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, தேவாலயங்கள் வருகிற 31-ந் தேதி வரை மூடப்படும்.

பரிகார பவனி ரத்து

ஆலயங்கள், வளாகத்தை கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. தவக்காலத்தை முன்னிட்டு நடைபெற இருந்த பரிகார பவனி ரத்து செய்யப்பட்டது.

இதேபோன்று பிரசித்தி பெற்ற ஊட்டி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்து வருகிறது. அங்கு பக்தர்கள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து விட்டு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். தினமும் ஒவ்வொரு உபயதாரர்கள் சார்பில் தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தை குறுகிய நேரத்தில் முடிக்கவும், கூட்டம் அதிகமாக சேராமல் இருக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

வெறிச்சோடிய முருகன் கோவில் வளாகம்

ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவிலில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் சோப்பு மூலம் கை மற்றும் கால்களை கழுவிய பின்னரே தரிசனத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சளி, இருமல், காய்ச்சலுடன் வருகிறவர்கள் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, தரிசனத்தை தவிர்த்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்ததால், வளாகம் வெறிச்சோடி இருந்ததை காண முடிந்தது.

Next Story