கொரோனா பாதிப்பு எதிரொலி: திண்டுக்கல் வரும் ரெயில் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை


கொரோனா பாதிப்பு எதிரொலி: திண்டுக்கல் வரும் ரெயில் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை
x
தினத்தந்தி 20 March 2020 5:00 AM IST (Updated: 20 March 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக திண்டுக்கல்லுக்கு வரும் ரெயில் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல்,

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் குறைவு தான். அதேநேரம் தமிழகத்துக்கு பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல் வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழர்களும் பிற மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

எனவே, பிறமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை சோதனை செய்யும்படி அரசு உத்தரவிட்டது. மேலும் பெரும்பாலானவர்கள் ரெயில்கள் மூலமே தமிழகத்துக்கு வந்து செல்கின்றனர். இதனால் ரெயில் நிலையங்களில் அனைத்து பயணிகளுக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது.

ரெயில் பயணிகளுக்கு பரிசோதனை

இதையடுத்து மாநிலம் முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களில் பரிசோதனை நடக்கிறது. இதில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தை பொறுத்தவரை 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இதில் கேரளா, கர்நாடகா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரெயில்கள் திண்டுக்கல் வழியாக இயக்கப்படுகின்றன. இதனால் வெளிமாநில பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வரும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்பட அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் டிஜிட்டல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் போது யாருக்காவது? காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்காக ரெயில் நிலையத்தில் ஆம்புலன்ஸ் தயாராக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் முக கவசம் அணிந்து வந்தனர்.

வழிபாட்டு தலங்கள்

இதற்கிடையே மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் வந்து செல்லும் வழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்யும்படி கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திண்டுக்கல் நகர் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் மக்கள் அதிகம் வந்து செல்லும் கோவில்கள், பள்ளிவாசல், கிறிஸ்தவ ஆலயங்களில் சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி மருந்து தெளித்து வருகின்றனர். மேலும் அங்கு வரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

விழிப்புணர்வு

இதேபோல் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில், கோர்ட்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட நீதிபதி ஜமுனா தலைமை தாங்கினார். இதில் டாக்டர் சீனிவாசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்களுக்கு தெர்மல் டிஜிட்டல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்தனர். பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் பொன்னகரம் பஸ் நிறுத்தம் அருகே கைகளை எவ்வாறு கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் மீனாதேவி தலைமை தாங்கி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார். அதையடுத்து கைகளை கிருமிநாசினி மூலம் எவ்வாறு கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story