சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 19 March 2020 11:00 PM GMT (Updated: 19 March 2020 10:54 PM GMT)

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை, 

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில், இறந்தவரின் உடலை உறவினர்களே ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் சென்றனர்.

சிவகங்கையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்லும் நிலையில், மருத்துவமனையை சுத்தம் செய்வது, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தகுதிக்ேகற்ப ரூ.7 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

இவர்களை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மாதம் பணிபுரிந்ததற்கான ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல் பேச்சுவார்த்ைத நடத்தி சமரசம் செய்தார். அதனை தொடர்ந்து வழக்கம் போல் பணிக்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒப்பந்த தொழிலாளர்கள் மருத்துவமனை வாசலில் அமர்ந்துகொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பகல் 11 மணி வரை நீடித்தது. பின்னர் மருத்துவ கல்லூரி டீன் பேச்சு வார்த்தை நடத்தியதன்பேரில் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு சென்றனர். போராட்டம் காரணமாக மருத்துவமனையில் சுகாதார பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை பிணவறையில் இருந்து எடுத்து வர ஊழியர்கள் இல்லாததால், இறந்தவர்களின் உறவினர்களே உடல்களை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி தள்ளிச் சென்றனர்.

Next Story