சபாநாயகரை சந்திக்க முகக்கவசம்-கையுறை அணிந்து வந்த தனவேலு எம்.எல்.ஏ.


சபாநாயகரை சந்திக்க முகக்கவசம்-கையுறை அணிந்து வந்த தனவேலு எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 20 March 2020 4:57 AM IST (Updated: 20 March 2020 4:57 AM IST)
t-max-icont-min-icon

சபாநாயகரை சந்திக்க முகக்கவசம், கையுறை அணிந்து தனவேலு எம்.எல்.ஏ. வந்தார்.

புதுச்சேரி,

காங்கிரஸ் அரசை விமர்சித்த தனவேலு எம்.எல்.ஏ., அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது எம்.எல்.ஏ. பதவியை பறிக்க அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் புகார் அளித்தார்.

சபாநாயகர் தன்மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி தனவேலு எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தனவேலு எம்.எல்.ஏ. தனது கருத்தை தெரிவிக்க அவகாசம் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.

மீண்டும் ஆஜர்

இதன்படி கடந்த 16-ந்தேதி நேரில் ஆஜர் ஆக சபாநாயகர் சிவக்கொழுந்து உத்தரவிட்டார். அப்போது ஆஜரான தனவேலு எம்.எல்.ஏ., தன்னிடம் விசாரணை நடத்தும்போது வக்கீல்கள் தன்னுடன் இருக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் சிவக்கொழுந்து நேற்று மீண்டும் ஆஜர் ஆக உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று தனவேலு எம்.எல்.ஏ. சட்டசபைக்கு வந்தார்.

முகக்கவசம்

அப்போது அவர் கொரோனா பீதியில் கையுறையும், முகக்கவசமும் அணிந்து இருந்தார். அவ்வாறே சென்று அவர் சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து தனவேலு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு கொறடா அனந்தராமன், தனது புகார் எதையும் நேரடியாக தெரிவிக்கவில்லை. நாளிதழ்களில் வந்த செய்திகள், கட்சி நிர்வாகிகள் கூறியதையே அவர் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த விஷயங்கள் கட்சி தாவல் தடை சட்டத்தில் வராது.

வக்கீல்கள் வரவில்லை

இதில் 22 சாட்சிகள் இருப்பதாக கூறுகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் அபாயம் இருப்பதால் எனது வக்கீல்கள் வரமுடியவில்லை. எனவே விளக்கம் அளிக்க மேலும் 2 வார கால அவகாசத்தை சபாநாயகரிடம் கேட்டுள்ளேன்.

இவ்வாறு தனவேலு எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story