கோவில்பட்டியில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை


கோவில்பட்டியில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 21 March 2020 3:00 AM IST (Updated: 20 March 2020 6:15 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கூலி தொழிலாளி 

கோவில்பட்டி–கடலையூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மகன் முத்துசெல்வன் (வயது 31). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இவருக்கு கடந்த 1½ ஆண்டாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு குணமாகாததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் முத்துசெல்வன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி கிழக்கு போலீசார் விரைந்து சென்று, இறந்த முத்துசெல்வனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோன்று கோவில்பட்டி–கடலையூர் ரோடு சண்முக நகர் 4–வது தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (41). கூலி தொழிலாளி. இவருக்கு வசந்தா தேவி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் மாடசாமி கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 18–ந்தேதி இரவில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனே அவருக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story