கொரோனா தடுப்பு நடவடிக்கை: நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு கலெக்டர் ஷில்பா தகவல்


கொரோனா தடுப்பு நடவடிக்கை:  நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 21 March 2020 4:30 AM IST (Updated: 20 March 2020 6:32 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 8 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட உள்ளதாக, என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு 

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 8 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார். அவர் முகக்கவசம் அணிந்து அந்த பகுதியை பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:–

கொரோனா தடுப்பு நடவடிக்கை 


நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. சந்தேகப்படும் படியான நோயாளிகள் இந்த வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் முக கவசங்கள், கிருமி நாசினிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான அளவு முக கவசம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

அவசர சிகிச்சை பிரிவு 

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் பரிசோதனை செய்ய பரிசோதனை மையமும், தனிமை மையமும் தொடங்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக இந்த ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட உள்ளது.

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டம் வரும் பயணிகள் புளியரை, கன்னியாகுமரி சோதனை சாவடிகளில் பரிசோதனை செய்த பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கோரோனா வைரஸ் தாக்கம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையினருடன் இணைந்து 24 மணி நேரமும் இந்த மையம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. பொதுமக்கள் இந்த மையத்தில் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நெல்லை மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரரன், வருவாய் அலுவலர் முததுராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக அவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கை கழுவ ஏதுவாக அமைக்கப்பட்டு உள்ள தண்ணீர் குழாய்களை பார்வையிட்டார்.

Next Story