கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முககவசம், கிருமிநாசினி தயாரிக்கும் பணி தீவிரம் கலெக்டர் நேரில் ஆய்வு
முககவசம், கிருமிநாசினி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முககவசம், கிருமிநாசினி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, முககவசம், கிருமி நாசினிகள் பற்றாக்குறை இன்றி கிடைக்கும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் அவற்றை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பூபால்ராயர்புரத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மகளிர் உதவிக்குழு மூலம் முககவசம் மற்றும் கிருமிநாசினி தயாரிக்கும் பணியையும், தாளமுத்துநகர் அருகில் உள்ள மாதாநகரில் பெல் பிறை மகளிர் சுயஉதவிக்குழு மூலம் முககவசம் தயாரிக்கும் பணியையும், மாப்பிள்ளையூரணி அருகில் உள்ள ஜெ.ஜெ.நகர் பகுதியில் சுமங்கலி மகளிர் சுயஉதவிக்குழு மூலம் கிருமி நாசினி மற்றும் நாப்கின் தயாரிக்கும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
அச்சப்பட வேண்டாம்
தமிழக அரசு உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பணிகள் நடந்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்காலிக கை கழுவுமிடம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் முககவசம், கிருமி நாசினிகள் பற்றாக்குறையை போக்கும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் அவற்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அரசு தெரிவித்துள்ளவாறு அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி, அவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி, உதவி திட்ட அலுவலர் பிரேமா மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story