கோவில்பட்டியில் அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சுத்தமாக கை கழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது
கோவில்பட்டியில் அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுத்தமாக கை கழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
சப்–கோர்ட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்பட்டி சப்–கோர்ட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. சப்–கோர்ட்டு நீதிபதி அகிலா தேவி தலைமை தாங்கினார். உரிமையியல் நீதிபதி முரளிதரன், மாஜிஸ்திரேட்டுகள் பாரதிதாசன் (முதலாவது ஜூடிசியல்), சுப்பிரமணியன் (2–வது ஜூடிசியல்), விரைவு கோர்ட்டு நீதிபதி பர்வதராஜ் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொரோனா வைரஸ் அறிகுறிகள், சிகிச்சைகள், தடுப்பு முறைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ராமமூர்த்தி விளக்கி கூறினார். கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, அடிக்கடி சோப்பு மூலம் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கைகளை சுத்தமாக கழுவும் முறை குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
அரசு வக்கீல் சந்திரசேகர், வக்கீல்கள் விஜயபாஸ்கர், கருப்பசாமி, கோபி, தன்ராஜ், நகரசபை சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன், வள்ளிராஜ், காஜா, ரோட்டரி சங்க செயலாளர் முத்து முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உதவி கலெக்டர் அலுவலகம்
இதேபோன்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் விஜயா தலைமை தாங்கினார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முறைகள் குறித்து நகரசபை சுகாதார அலுவலர் இளங்கோ விளக்கி கூறினார். தொடர்ந்து சுத்தமாக கைகழுவுதல் குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
தாசில்தார் மணிகண்டன், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகுபதி, சுகாதார ஆய்வாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மின்வாரிய அலுவலகம்
கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகத்திலும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கைகளை சுத்தமாக கழுவுவது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி லாயல் நூற்பாலையிலும் கொரோனா வைரஸ் குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுத்தமாக கைகழுவும் முறை குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. துணை பொதுமேலாளர் சரவணன், மேலாளர் கலீல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story