கொரோனா எதிரொலி: குமரி மாவட்டத்தில் 170 அரசு பஸ்கள் நிறுத்தம்


கொரோனா எதிரொலி: குமரி மாவட்டத்தில் 170 அரசு பஸ்கள் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 March 2020 3:45 AM IST (Updated: 20 March 2020 7:47 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் எதிரொலியால் குமரி மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் 170 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.

நாகர்கோவில்,

கொரோனா வைரஸ் நாளுக்கு, நாள் மக்களை அதிகமாக அச்சுறுத்தி வருகிறது. பிறநாடுகளில் இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருப்பதும், இந்தியாவிலும் கொரோனாவால் பாதிப்பு மெல்ல, மெல்ல அதிகரித்து வருவதும் தான் மக்களின் அச்சத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

இதனால் வெளியூர் மற்றும் வெளிமாநில பயணங்களை தவிர்க்கவும், கூட்டம் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனவே பொது இடங்களில் மக்களின் வழக்கமான நடமாட்டமும் குறைந்துள்ளது.

அதேபோல் அரசு பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் பஸ்சில் பயணம் செய்ய வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்ட பகுதிகள் மற்றும் கேரள மாநில பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இயக்கப்படும் மொத்த பஸ்களின் எண்ணிக்கையில் 20 சதவீத பஸ்களை குறைத்து இயக்க உயர் அதிகாரிகள் நாகர்கோவில் மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து குமரி மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகாசி, தேனி, குமுளி, போடி, திருப்பூர், கோவை, சேலம், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மொத்தம் 860 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இவற்றில் 20 சதவீத பஸ்கள் நேற்று குறைத்து இயக்கப்பட்டன. அதாவது நாகர்கோவில்- மதுரை என்ட் டூ என்ட் பஸ்கள், திருநெல்வேலி என்ட் டூ என்ட் பஸ்கள், வேளாங்கண்ணி, குமுளி, திண்டுக்கல் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்களில் 170 பஸ்கள் நிறுத்தப்பட்டது.

வழக்கமாக நாள் ஒன்றுக்கு நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு 860 பஸ்கள் மூலம் ரூ.85 லட்சம் வருவாய் கிடைக்கும். ஆனால் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கூட்டம் குறைந்ததாலும், 20 சதவீத பஸ்கள் குறைத்து இயக்கப்படுவதாலும் ரூ.25 லட்சம் வருவாய் குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story