கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆலங்குடி,
ஆலங்குடி டாக்சி மார்க்கெட்டில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாமிற்கு போக்குவரத்து அலுவலர் தங்கராசு தலைமை தாங்கினார். ஆலங்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜா, டாக்சிமார்க்கெட் நிர்வாகிகள் மற்றும் டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சோப்பு போட்டு கைகளை பலமுறை கழுவ வேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டதுடன், அதற்கான செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. மேலும், பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்கள், டாக்சி மார்க்கெட் வளாகம் மற்றும் சுற்றுப் புறங்களில் கிருமி நாசினி தெளித்தனர்.
பொன்னமராவதி தெற்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பாக கொரோனா விழிப்புணர்வு 8-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. முகாமிற்கு கட்சியின் ஒன்றிய தலைவர் சேதுமலையாண்டி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி முன்னிலை வகித்தார். இதில், கட்சி நிர்வாகிகள் ராம்ஜி, தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீரமங்கலத்தில் உள்ள பெரும்பாலான டீக்கடைகள், பழரச கடைகள், பெட்டிக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கைகளை கழுவிக் கொள்ள தண்ணீர் மற்றும் சோப்பு வைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் பெரிய பேரலில் தண்ணீரில் மஞ்சள் கலந்து அதில் வேப்பிலை போடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் கைகளை கழுவி வருகின்றனர். அதே போல வாடிக்கையாளர்கள் டீ குடித்த டம்ளர்கள் மஞ்சள் தண்ணீரிலும், பிறகு சுடுதண்ணீரிலும் கழுவிய பிறகே டீ போடப்படுகிறது.
கீரமங்கலம் பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் கூடும் இடங்களில், கடைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய மருத்துவ அலுவலர் ராஜசுகன், கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் சேகர் மற்றும் அரசு அலுவலக பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு விழிப் புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இலுப்பூர் பேரூராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தலைமையில், தாசில்தார் முருகேசன் முன்னிலையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.
அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமாவதி, சிங்காரவேல் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருமயம் அருகே உள்ள பேரையூர் ஊராட்சி சார்பில், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், சமுதாயக் கூடங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு பிளிச்சீங் பவுடர் தூவப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் விஜயா கருப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன், ஊராட்சி செயலாளர் மாரியப்பன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story