ஒற்றை யானை அட்டகாசம் ; ஆழ்துளை கிணற்றின் குழாய்களை சேதப்படுத்தியது
குடியாத்தம் அருகே விவசாய நிலத்துக்குள் ஒற்றை யானை நெல், வாழை பயிர்களை நாசப்படுத்தியது. மேலும் ஆழ்துளை கிணற்றின் குழாய்களை சேதப்படுத்தியது.
குடியாத்தம்,
குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியபடி ஆந்திர மாநில வனப்பகுதியில் கவுண்டன்ய யானைகள் சரணாலயத்தில் 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் அடிக்கடி குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியபடி தமிழக பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறையினர் 15 யானைகள் கொண்ட யானை கூட்டத்தை ஆந்திர மாநில எல்லைக்குள் விரட்டினர்.
ஆனாலும் அந்த யானைகள் மீண்டும் தமிழக எல்லைப்பகுதிக்கு வந்து இங்குள்ள கிராமங்களில் ஒட்டியபடி உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. வனத்துறையினர் பல நாட்கள் போராடி குடியாத்தம் அருகே பரதராமி கந்தல்செருவு மற்றும் சைனகுன்டாவை அடுத்த கொதலமடுகு பகுதிக்கு விரட்டிவிட்டனர்.
ஆனாலும் மோர்தானா மற்றும் பரதராமியை அடுத்த கொத்தூர் பகுதியில் ஒற்றை யானை தொடர்ந்து விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் மோர்தானா அருகே ஜங்காலபள்ளி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலேயே ஒற்றையானை விளை நிலங்களுக்குள் புகுந்தது. அங்கு நெற்பயிர்களையும், வாழை மரங்களையும் சேதப்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர் பிரகாசம் உள்ளிட்ட வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் ஒற்றை யானையை பல மணி நேரம் போராடி காட்டுக்குள் விரட்டி விட்டனர்.
இதேபகுதியை சேர்ந்த சாமு மற்றும் சேகர் நிலங்களில் புகுந்த அந்த யானை நெற்பயிர்களையும் நிலங்களில் போடப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றின் குழாய்களையும், மின்மோட்டாரையும் மிதித்து சேதப்படுத்தியது.
விவசாய நிலங்களில் ஏற்பட்ட சேதம் குறித்து வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த ஒற்றை யானையை ஆந்திர மாநில காட்டுக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story