‘வாட்ஸ்-அப்’ குழுக்கள் தீவிர கண்காணிப்பு: கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் கைது சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி
கொரோனா குறித்து யாராவது வதந்தி பரப்பினால் கைது செய்யப்படுவார்கள். இதற்காக ‘வாட்ஸ்-அப்’ குழுக்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை,
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் போலீஸ் துறையும் தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. கொரோனா நோய் அறிகுறி குறித்தும், அது பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை போலீசார் குடியிருப்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் கமிஷனர் எச்.எம்.ஜெயராம், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர் தர்மராஜன், சென்னை போலீஸ் ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சித்ரா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வதந்தி பரப்பினால் கைது
கொரோனா நோய் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. எச்சரித்துள்ளார். எனவே வதந்தி பரப்புவோர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கொரோனா குறித்து ‘வாட்ஸ்-அப்’பில் யார், யார் எல்லாம் வதந்தி பரப்புகிறார்கள்? என்பதை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ பிரிவு போலீசாரும், இணை கமிஷனர் தலைமையிலான சிறப்பு ‘சைபர் கிரைம்’ பிரிவு போலீசாரும் கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
காணொலி காட்சி வாகனம்
‘டாஸ்மாக்’ நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் சென்னை ஜி.எஸ்.டி.சாலை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் 19 இடங்களில் 66 கேமராக்கள் பொருத்தப்பட்டன. பொதுமக்கள் உதவியுடன் பள்ளிக்கரணை காமாட்சி மேம்பாலம் சர்வீஸ் சாலை பகுதியில் 22 கேமராக்கள் நிறுவப்பட்டன. அப்பகுதியில் நெடுஞ் சாலைத்துறை உதவியுடன் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது.
குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவோரின் வழக்கு சம்பந்தமான வாகனங்களை பறிமுதல் செய்து நிறுத்துவதற்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டி.எல்.எப். நிறுவனம் சார்பில் போக்குவரத்து போலீஸ்துறைக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
இந்த வசதிகள் அனைத்தும் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்றது. விழாவில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு அனைத்து வசதிகளையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் போது, கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி கொரோனா விழிப்புணர்வு காணொலி காட்சிகள் அடங்கிய வாகன ரோந்தையும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
மேலும் அவரது உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் சார்பில் 23 இடங்களில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story