கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி நாளை மறுநாள் முதல் புதுச்சேரி அரசு ஏற்பாடு
புதுவை மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை ம றுநாள் முதல் அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என முதல் -அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
காணொலி காட்சி
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். புதுவை மாநிலத்தில் சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
விளக்கி கூறினார்
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறினார். இன்னும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும், மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி கூறினார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2 மணி நேரம்
கொரோனா வைரஸ் தொடர்பாக மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, மாநில முதல்-அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் சுமார் 2 மணி நேரம் கலந்துரையாடல் நிகழ்த்தினார். இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் இறந்துள்ளர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி விளக்கி கூறினார்.
அப்போது சில மாநில முதல்-அமைச்சர்கள், பிரதமரிடம் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு உள்ளது. எனவே தேவையான உபகரணங்கள் வாங்க நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். குடிமை பொருள் வழங்கல் துறை மூலமாக அரிசி, கோதுமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவருடன் பேச முடியாதவர்கள் தங்கள் கருத்துக்களை கடிதம் மூலம் தனக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
தீவிர கண்காணிப்பு
புதுவை, மாகியில் 24 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், ஏனாமில் 4 பேருக்கும் என மொத்தம் 31 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் மாகி பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு மட்டும் கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நல்ல நிலையில் உள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து புதுவைக்கு வந்த 561 பேர் தனி அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 120 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ெதாழிற்சாலைகள், ஓட்டல்கள், தனியார் நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சுழற்சி முறை
புதுவையில் உள்ள 2 மால்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஆனால் 2 பிரிவுகளாக பிரிந்து சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு அலுவலகத்தில் உள்ள ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டும் முதல் வாரத்தில் பணிக்கு வந்தால் போதும். மறு வாரம் மீதி உள்ள 50 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும். ஆனால் சுகாதாரத்துறை, வருவாய்துறை ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும்.
நாளை முதல் அமல்
இந்த நடைமுறை நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வரும்.
பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதன் பேரில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றும் சுகாதாரத்துறை, வருவாய்துறை, காவல்துறையினரை உற்சாகப்படுத்தும் விதமாக அன்று மாலை 5 மணிக்கு பொதுமக்கள் அனைவரும் சுமார் 5 நிமிடம் வீட்டில் இருந்த படி கைகளை தட்ட வேண்டும் அல்லது மணி அடிக்க வேண்டும். அன்று முழுவதும் புதுவையில் கடைகளை அடைக்க வேண்டும் என்று வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செயற்கை சுவாச கருவிகள்
கொரோனா வைரஸ் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நேரங்களில் முக கவசம், கை கழுவும் திரவத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தேவை இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டாம். தீவிர சிகிச்சை தேவைப்பட்டால் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாத்திரைகள் வாங்க அரசு பொது மருத்துவமனைக்கு வர வேண்டாம். இந்த மாத்திரைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். ேதவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்கள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றைக்குள்(சனிக்கிழமை) சுமார் 37 செயற்கை சுவாச கருவிகள் வாங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கலெக்டர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story