2011-ம் ஆண்டில் தேர்வான 362 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க அவசர சட்டம் கொண்டுவருவது குறித்து மந்திரிசபையில் முடிவு சட்டசபையில் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


2011-ம் ஆண்டில் தேர்வான 362 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க   அவசர சட்டம் கொண்டுவருவது குறித்து மந்திரிசபையில் முடிவு   சட்டசபையில் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 21 March 2020 4:26 AM IST (Updated: 21 March 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

2011-ம் ஆண்டில் தேர்வான 362 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க அவசர சட்டம் கொண்டுவருவது குறித்து மந்திரிசபையில் முடிவு செய்யப்படும் என்று சட்ட சபையில் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. 5-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 15-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பூஜ்ஜிய நேரம் அனுமதிக்கப்பட்டது. பிறகு உறுப்பினர் எச்.கே.பட்டீல் உள்பட பல்வேறு உறுப்பினர்கள் நேற்று முன்தினம், கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு கே.ஏ.எஸ். (கர்நாடக ஆட்சி நிர்வாகம்) தேர்வில் தேர்வான 362 பேரின் நிலை குறித்து பிரச்சினை கிளப்பி பேசினர். இதுபற்றி விதி எண் 69-ன் கீழ் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு சட்டத்துறை மந்திரி மாதுசாமி நேற்று பதில் அளிக்கையில் கூறியதாவது:-

சி.ஐ.டி. விசாரணை

கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 2011-ம் ஆண்டு 362 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மைத்ரி என்ற பெண் விதான சவுதா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தான் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததாகவும், நேர்முக தேர்வில் தனக்கு மிக குறைந்த மதிப்பெண்கள் வழங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதன் அடிப்படையில் அன்று சித்தராமையா தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் அரசு, சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது.

சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், அந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பது மேலோட்டமாக தெரிவதாக கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் அப்போது மாநில அரசு, 362 பேரின் தேர்ச்சியை ரத்து செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டோர் கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், அரசு பணியாளர் தேர்வாணைய கே.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற 362 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

நிர்வாக தீர்ப்பாயம்

அதன் அடிப்படையில் சுமார் 75 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாநில அரசு வழங்கியது. ஆனால், கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் கர்நாடக அரசின் வக்கீலின் வாதத்தில் இடம் பெற்ற சில அம்சங்களால், கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த 75 பேரின் நியமனமும் ரத்து செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. தேர்வு எழுதிய தேர்வர்களோ அல்லது அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களோ யார் மீது தவறு இருப்பதற்கான ஆதாரம் இல்லை. சி.ஐ.டி. போலீசார் எதன் அடிப்படையில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதாக அறிக்கை அளித்தனர் என்று தெரியவில்லை.

மிகப்பெரிய தவறு

மேலும் அந்த சி.ஐ.டி. போலீசார் அரசுக்கு அறிக்கை அளித்தது தவறு. அவர்கள் கோர்ட்டில் தான் அறிக்கை தாக்கல் செய்து வழக்கை தொடர்ந்திருக்க வேண்டும். இது மிகப்பெரிய தவறு. இங்கு பேசிய உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நியாயம் பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தினர். அரசின் நிலையும் அவர்களுக்கு ஆதரவாக தான் உள்ளது. அந்த 362 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்களுக்கு ஆதரவாக அரசு இருக்கிறது. இதில் எங்களு்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் கோர்ட்டு உத்தரவை மீறி அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினால் அதிகாரிகள் சிக்கலில் சிக்கி கொள்வார்கள். கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும். இந்த சபையில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றலாம் என்று உறுப்பினர்கள் கூறினர். தேவைப்பட்டால் அந்த முடிவும் எடுக்கப்படும். அவசர சட்டம் கொண்டு வந்து, 362 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு மந்திரி மாதுசாமி கூறினார்.

அவசர சட்டம்

அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எச்.கே.பட்டீல், “இந்த சபையை விட மேலான அமைப்பு வேறு எதுவும் இல்லை. இங்கு தீர்மானம் நிறைவேற்றி, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கலாம். அவசர சட்டம் கொண்டு வந்து அவர்களை நியமிக்கலாம். இதுகுறித்து முதல்-மந்திரி பதில் அளிக்க வேண்டும்” என்றார்.

அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, “அவசர சட்டம் கொண்டு வந்து 362 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்த முதல்-மந்திரி எடியூரப்பா, “இந்த விஷயத்தில் இந்த சபையில் அனைவரின் கருத்தும் ஒரே மாதிரியாக உள்ளது. அவசர சட்டம் கொண்டுவருவது குறித்து மந்திரிசபையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Next Story