கண்டனி கிராமத்தில் மயானத்திற்கு பாதை அமைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
கண்டனி கிராமத்தில் மயானத்திற்கு பாதை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை,
இளையான்குடியை அடுத்துள்ளது கண்டனி கிராமம். இங்கு அனைத்து தரப்பு மக்களும் வசித்துவரும் நிலையில், இங்குள்ள மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லை என கூறப்படுகிறது. தற்போது வரை மயானத்திற்கு, இறந்தவர்களின் உடலை தனிநபர்களின் விளைநிலங்கள் வழியாக தான் எடுத்து வரவேண்டியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு இளையான்குடியை சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா வீரமரணமடைந்தார்.
அவரது உடலை அடக்கம் செய்ய தனிநபர் நிலத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவரது உடலை கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னரும் இந்த பிரச்சினை சரி செய்யப்படவில்லை.
மயானத்திற்கு பாதை அமைத்துதரக் கோரி கண்டனி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கலெக்டர் ஜெயகாந்தன் வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story