யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு சிறையில் கொரோனா தாக்க வாய்ப்பு கோர்ட்டில் வக்கீல் தகவல்
யெஸ் வங்கி வழக்கில் கைது செய்யப்பட்ட ராணா கபூருக்கு சிறையில் கொரோனா தாக்க அதிக வாய்ப்புள்ளது என கோர்ட்டில் வக்கீல் தெரிவித்தார்.
மும்பை,
பெருநிறுவனங்களுக்கு முறைகேடாக கடன்களை வழங்கியதால் யெஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து யெஸ் வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கியது. யெஸ் வங்கியின் நிறுவனரான ராணா கபூர் பிரபல தொழிலதிபர்களுக்கு தாராளமாக கடன்களை வழங்கியதும், இதன்மூலம் அவரும், அவரது குடும்பத்தினரும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கு ஆதாயம் பெற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த 7-ம் தேதி அவரை கைது செய்தது.
கொரோனா தாக்க வாய்ப்பு
ராணா கபூரின் அமலாக்கத்துறை காவல் முடிந்து அவரை அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் ராணா கபூர் மீது சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் அவரை தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டில் கோரப்பட்டது.
அப்போது, ராணா கபூர் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ராணா கபூர் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர். சிறையில் அடைப்பதால் அவரை கொரோனா வைரஸ் எளிதாக தாக்க வாய்ப்புள்ளது. வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் சிறையில் அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மிக, மிக மோசமான நிலை ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் படி ராணா கபூருக்கு தேவையான சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்குமாறு சிறை அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
Related Tags :
Next Story