பண்ருட்டியில் திருமணமான 8 மாதத்தில் தம்பதி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


பண்ருட்டியில்   திருமணமான 8 மாதத்தில் தம்பதி தற்கொலை   உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 21 March 2020 5:45 AM IST (Updated: 21 March 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் திருமணமான 8 மாதத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். உருக்கமான கடிதம் போலீசிடம் சிக்கியுள்ளது.

பண்ருட்டி, 

பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் அழகானந்தம். இவருடைய மகன் மணிகண்டன்(வயது 29). இவர், கோவில் கோபுரத்தில் உள்ள பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி செய்து வந்தார்.

இவரும், டி.ராஜாபாளையத்தை சேர்ந்த சிவராமன் என்பவரும் பணி செய்து வந்தார். அந்த வகையில் மணிகண்டன் அடிக்கடி சிவராமன் வீட்டிற்கு சென்று வந்தார். இதனால் சிவராமன் மகள் மகேஸ்வரிக்கும்(22), மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். மகேஸ்வரி, பி.எஸ்சி. வேதியியல் படித்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரியவந்தது. ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது வீட்டிலும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது.

மனைவி தற்கொலை

திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதி, திருவதிகையிலேயே தனி வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே மகேஸ்வரி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். மணிகண்டன் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானார். தினமும் அவர் காலையில் வேலைக்கு செல்வதும், மாலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆனால் கணவரின் இந்த செயல், மகேஸ்வரிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் கடுமையாக கண்டித்தும் மணிகண்டன் கேட்கவில்லை.

வழக்கம்போல் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதை தட்டிக்கேட்ட அவரது மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் சிறிது நேரத்தில் மணிகண்டன் தூங்கி விட்டார். இதனால் மனமுடைந்த மகேஸ்வரி, துப்பட்டாவால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவரும் சாவு

நள்ளிரவில் போதை தெளிந்ததும் கண்விழித்த மணிகண்டனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு, அவர் கதறி அழுதார். உடனே அவர், மகேஸ்வரியை தூக்கில் இருந்து இறக்கினார். பின்னர் மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே துப்பட்டாவால் மணிகண்டனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையில நேற்று காலை 6.30 மணி வரை மணிகண்டனும், அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆனால் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு புதுமண தம்பதி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி உடனடியாக பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று மணிகண்டன், மகேஸ்வரி ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான கடிதம்

பின்னர் போலீசார், அந்த வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில், மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதற்கு முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் மணிகண்டன் எழுதியிருந்ததாவது:-

எனது குடிபழக்கத்தால் மனைவியையும், அவரது வயிற்றில் வளர்ந்த சிசுவையும் பறிகொடுத்து விட்டேன். அவர் இல்லாத இந்த உலகத்தில் நானும் வாழமுடியாது. எனவே என் மனைவி சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன். அம்மா, என்னை மன்னித்து விடுங்கள். மாமா, எனது அம்மாவை கவனித்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் திருவதிகை பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story