வருகிற 31-ந்தேதி வரை கோவை கோர்ட்டுக்கு வர பொதுமக்களுக்கு தடை - அனைத்து வழக்குகளும் தள்ளிவைப்பு


வருகிற 31-ந்தேதி வரை கோவை கோர்ட்டுக்கு வர பொதுமக்களுக்கு தடை - அனைத்து வழக்குகளும் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 21 March 2020 1:30 PM IST (Updated: 21 March 2020 1:18 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவை கோர்ட்டுக்கு வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வழக்குகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

கோவை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுசுள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை கோர்ட்டு வளாகத்தில் கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோர்ட்டுக்கு வரும் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கை கழுவ கிருமி நாசினியும் வழங்கப்படுகிறது-.

இதுதொடர்பாக கோவை கோர்ட்டு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின்படி கோவை கோர்ட்டுகளுக்கு வருகிற வக்கீல்கள் மற்றும் வழக்காடிகள்(பொதுமக்கள்) யாரும் வருகிற 31-ந் தேதி வரை வரவேண்டாம்.

மேலும் அழைப்பு இல்லாமல் அனைத்து வழக்குகளுக்கும் வாய்தா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த கோர்ட்டிலும் எந்த உத்தரவும் வழங்கப்பட மாட்டாது. அனைத்து வழக்குகளிலும் தற்போதைய நிலையே தொடரப்பட்டு தள்ளிவைக்கப்படும். ஜாமீன் மனுக்கள் மற்றும் அவசர மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஜாமீன் மனுதாரர் ஆஜர் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வக்கீல்கள் மட்டும் வந்தால் போதும். நீதிமன்ற காவல் நீட்டிப்பிற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் அழைத்து வர வேண்டியதில்லை. காணொலி காட்சி மூலம் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுகிறது.

குற்றவியல்(கிரிமினல்) மற்றும் உரிமையியல்(சிவில்) வழக்குகளில் எதிர்மறையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட மாட்டாது. மேலும் 31-ந் தேதி வரை கோவை வக்கீல்கள் சங்கம், கேண்டீன், நூலகம், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல் அலுவலகங்கள் மற்றும் துணை சங்கங்களின் அலுவலகங்களும் மூடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவை கோர்ட்டுக்கு வழக்கு சம்பந்தப்பட்ட பொதுமக்கள் வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கோர்ட்டு வளாகத்தில் நேற்று கூட்டம் குறைந்து காணப்பட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் அவர்கள் கிருமி நாசினி கொண்டு கைகழுவுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

Next Story