அரசு உத்தரவை மீறி செயல்பட்ட வாரச்சந்தை; ஆந்திர மாநில அரசு பஸ்களிலும் அலைமோதிய கூட்டம்
வாணியம்பாடியில் அரசு உத்தரவை மீறி வாரச்சந்தை நடந்தது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்களை வாங்கி சென்றனர்.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கிய நகரமான வாணியம்பாடியில் வார இறுதிநாளான சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. உழவர்சந்தை மைதானத்துக்கு வெளியே 300-க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் கொட்டகை மைத்து தினசரி மார்க்கெட் செயல்படுகிறது. அந்த இடமே வாரச்சந்தையாகவும் மாற்றப்பட்டு சனிக்கிழமை தோறும் விற்பனை நடக்கிறது.
நகரிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே ஆந்திர மாநில கிராமங்கள் தொடங்கி விடுகின்றன. இதனால் ஆந்திர மாநில வியாபாரிகளும் வாணியம்பாடி வாரச்சந்தைக்கு வந்து பொருட்களை விற்று லாபம் ஈட்டிச்செல்கின்றனர்.
இந்த சந்தையில் ஊசி, பாசி முதல் கட்டிட தொழிலாளர்களுக்கு தேவையான இரும்பு சட்டி, மண்வெட்டி, கோடரிகள் வரை விற்கப்படுகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளார். இதனால் பஸ், ரெயில்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூடும் இடங்களான வாரச்சந்தைகள் செயல்பட 31-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களும் மக்கள் வழிபாட்டுக்கு திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அரசு உத்தரவை புறம் தள்ளும் வகையில் வாணியம்பாடியில் நேற்று வாரச்சந்தை செயல்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வாணியம்பாடி சந்தைக்கு படையெடுத்தனர். அங்கு கூட்டம் அலைமோதியது.
அண்டை மாநிலங்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களின் எல்லைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வாணியம்பாடிக்கு நேற்று ஆந்திர மாநில அரசு பஸ்கள் வழக்கம்போல் வந்து சென்றன. வாரச்சந்தையையொட்டி அந்த பஸ்சில் கூட்டம் அலைமோதியது. எல்லை மூடப்பட்ட நிலையில் இந்த பஸ்கள் மட்டும் எப்படி வந்தன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வாரச்சந்தை உத்தரவை மீறி நடந்தாலும் இங்கு நடைபெறும் மாட்டுச்சந்தைக்கு மட்டும் தடைவிதிக்கப்பட்டது. எனினும் சந்தையையொட்டிய பகுதிகளில் மாடு விற்பனையும் நடந்தது.
இதேபோல் ஆம்பூர் பஜார் பகுதியில் நேற்று காலை 9 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் பஜார் பகுதிக்கு வருகை தந்து தங்களது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல பொதுமக்கள் வருகை அதிகரிக்க தொடங்கியது. இதனால் பஜார் பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பஜார் பகுதியில் கூடியதால் பஜார் பகுதியில் அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எந்த வழியிலும் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் பஜார் பகுதிக்கு வந்த பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் பெரும் அவதி அடைந்தனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு என்பதால் பொதுமக்கள் பஜார் பகுதிக்கு அதிக அளவில் வந்தனர், முழு அடைப்பு தொடர்ந்து இருக்காலம் என்ற அச்சத்தில் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்’’ என்றனர்.
Related Tags :
Next Story