கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம் சந்தைகள் மூடல்


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி:  பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம் சந்தைகள் மூடல்
x
தினத்தந்தி 22 March 2020 4:00 AM IST (Updated: 21 March 2020 5:30 PM IST)
t-max-icont-min-icon

பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சந்தைகள் மூடப்பட்டன.

திருச்செந்தூர்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சந்தைகள் மூடப்பட்டன.

திருச்செந்தூர் 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், சந்தைகள், பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை வருகிற 31–ந்தேதி வரையிலும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க அடிக்கடி சுத்தமாக கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொதுஇடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம், ரெயில்நிலைய வளாகம், உதவி கலெக்டர் அலுவலகம், பொது கழிப்பறை கட்டிடம் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

காயல்பட்டினம், ஆறுமுகநேரி 

இதேபோன்று காயல்பட்டினம் பஸ்நிலையம், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பள்ளிவாசல்களில் தொழுகைக்கு செல்கிறவர்கள், கை கழுவும் திரவத்தால் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

ஆறுமுகநேரியில் வாரந்தோறும் செவ்வாய், சனிக்கிழமைகளில் நடைபெறும் சந்தை, வருகிற 31–ந்தேதி வரையிலும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று சந்தைக்கு வந்த பொதுமக்கள், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சந்தைக்கு வெளியே மீன்களை விற்ற வியாபாரிகளையும் நகர பஞ்சாயத்து ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

தென்திருப்பேரை–கயத்தாறு 

ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை பகுதிகளில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் பக்தர்கள் கை கழுவும் திரவத்தால் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். எனினும் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

கயத்தாறு பஸ்நிலையம், பழைய பஸ் நிறுத்தம் மற்றும் அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஆட்டோ, கார், வேன் நிறுத்தங்களிலும், அங்குள்ள அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணிகளை நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ஜோதிபாசு பார்வையிட்டார். கடம்பூர் ரெயில் நிலையம், பயணிகள் நிழற்கூடம் உள்ளிட்ட இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

எட்டயபுரம்–உடன்குடி 

எட்டயபுரத்தில் சனிக்கிழமைதோறும் நடைபெறும் ஆட்டுச்சந்தை நேற்று நடைபெறவில்லை. இதனை அறியாமல் வந்த சில வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

உடன்குடியில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை வருகிற 31–ந்தேதி வரையிலும் செயல்படாது என்று நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் மாணிக்கராஜ் தெரிவித்தார். ஏரலில் பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மூடப்பட்டன. மற்ற அனைத்து கடைகளும் திறந்து இருந்தன.

Next Story