லாரி–மோட்டார்சைக்கிள் மோதலில் தொழிலாளி பலி ; லிப்டு கேட்டுச்சென்ற 2 வாலிபர்கள் படுகாயம்


லாரி–மோட்டார்சைக்கிள் மோதலில் தொழிலாளி பலி ; லிப்டு கேட்டுச்சென்ற 2 வாலிபர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 21 March 2020 10:00 PM GMT (Updated: 21 March 2020 12:39 PM GMT)

சோளிங்கர் அருகே லாரி–மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சோளிங்கர், 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நவீன்குமார் (வயது 27), திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இவர் தொழிலாளியாக உள்ளார். நேற்று சோளிங்கரிலிருந்து அரக்கோணத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கரிக்கல் அருகே சென்றபோது அதே ஊரை சேர்ந்த லோகேஷ் (18), ஜலபதி (15) ஆகியோர் தாங்களும் அரக்கோணம் செல்வதாக கூறி வாகனத்தில் வருவதற்கு லிப்ட் கேட்டனர்.

உடனே நவீன்குமார் இருவரையும் தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். களவட்டாம்பாடி நெடுஞ்சாலையில் அவர்களது மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள திருப்பத்தில் திரும்பியபோது திடீரென வந்த லாரியும் இவர்களது மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த சம்பவத்தில் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் நவீன்குமார் அந்த இடத்திலேயே இறந்து விட்டார். தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் விரைந்து சென்று படுகாயத்துடன் துடித்த லோகேஷ், ஜலபதி ஆகிய 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த நவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே படுகாயம் அடைந்தவர்களில் லோகேஷின் உடல்நிலை மோசமாக இருந்தது. முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து சோளிங்கர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story