தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடவடிக்கை
தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் சோதனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அவ்வப்போது கடல் அட்டைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வனத்துறை அதிகாரிகளும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தூத்துக்குடி–எட்டயபுரம் சாலையில் உள்ள கல்லூரியின் பின்புறத்தில் ஒரு குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று மதியம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதப்படுத்தப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
கடல் அட்டைகள் பறிமுதல்
இந்த நிலையில் தூத்துக்குடி பெரிய பள்ளிவாசல் பின்புறத்தில் உள்ள தெருவில் ஒரு காரில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அங்கு சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை திறந்து பார்த்தபோது, 4 சாக்கு மூட்டைகள் இருந்தன. அதில் சுமார் 400 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார், 650 கிலோ கடல் அட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்து, தூத்துக்குடி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story