இன்று ஊரடங்கு கடைபிடிப்பு: தூத்துக்குடி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர் காய்கறிகள் விலை உயர்வு
இன்று ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி, தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி,
இன்று ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி, தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் காய்கறிகள் விலை உயர்ந்தது.
ஊரடங்கு
பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும், எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் ஊரடங்கை கடைபிடித்து காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியே வராமல் வீட்டுக்குள் இருக்கவும் பிரதமர் நரேந்திரமோடி கூறி இருந்தார்.
அதன்படி தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் இன்று ஊரடங்கை கடைபிடித்து காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என்றும், அன்றைய தினம் பஸ்கள், ரெயில்கள் ஓடாது என்றும் தெரிவித்து உள்ளார். மார்க்கெட்டுகள், கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
காய்கறிகள் விலை உயர்வு
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள காய்கனி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க நேற்று காலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் வியாபாரம் மும்முரமாக நடந்தது. காய்கறிகள், பழங்கள் வாங்க பொதுமக்கள் பலர் முககவசங்கள் அணிந்தபடி வந்தனர். பொதுமக்கள் 3 முதல் 4 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கி சென்றனர். இன்று மார்க்கெட் மூடப்பட்டு இருக்கும் என்பதால், காய்கறிகள் விலை உயர்ந்து காணப்பட்டது.
தூத்துக்குடி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ரூ.20–க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் நேற்று ரூ.30–க்கும், ரூ.15–க்கு விற்கப்பட்ட மிளகாய் ரூ.30–க்கும், ரூ.12–க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.15–க்கும், ரூ.20–க்கு விற்கப்பட்ட மாங்காய் ரூ.30–க்கும், ரூ.20–க்கு விற்கப்பட்ட மல்லி இலை ரூ.30–க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. மேலும் பல்லாரி ரூ.30–க்கும், சின்ன வெங்காயம் ரூ.50–க்கும், இஞ்சி ரூ.100–க்கும், உருளைக்கிழங்கு ரூ.30–க்கும், கேரட் ரூ.30–க்கும், பீட்ரூட், சவ்சவ் ரூ.15–க்கும், அவரைக்காய் ரூ.40–ககும் விற்கப்பட்டது. இதேபோல் பப்பாளி கிலோ ஒன்று ரூ.30–க்கும், கொய்யாப்பழம் ரூ.60–க்கும், சப்போட்டா ரூ.20–க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story