கோழிக்கறி விலை சரிந்தது; ஒரு முட்டை ரூ.2.25-க்கு விற்பனை


கோழிக்கறி விலை சரிந்தது; ஒரு முட்டை ரூ.2.25-க்கு விற்பனை
x
தினத்தந்தி 21 March 2020 10:15 PM GMT (Updated: 21 March 2020 2:26 PM GMT)

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக கோழிக்கறி விலை சரிந்தது. ஒரு முட்டை ரூ.2.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கரூர், 

மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவி வரும் தொற்று நோயான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதையொட்டி இந்தியாவில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக பிராய்லர் கோழிமுட்டையின் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கரூர் பழையபைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு முட்டை கடையில், 100 முட்டைகள் ரூ.225-க்கு நேற்று விற்பனையானது. சில்லரை விலையில் ஒரு முட்டை 2 ரூபாய் 25 காசுக்கு விற்பனையாது.

தாந்தோணிமலை மெயின்ரோட்டில் உள்ள சில கடைகளில் 12 காடை முட்டைகள் ரூ.40 என்கிற விலையில் விற்கப்பட்டது. மற்ற இடங்களில் ரூ.3-ரூ.5 வரை முட்டைகள் விற்பனையாகிறது. எனினும் அந்த முட்டைகளை உணவுக்காக வாங்க மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டாததால் முட்டை வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் முட்டை, இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா பரவாது என அவர்கள் தெரிவித்தனர்.

இதே போல் பிராய்லர் கோழிக்கறியின் விலையும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கரூரில் பல்வேறு கடைகளில் ஒரு கிலோ கோழிக்கறி ரூ.70 என்கிற விலையில் விற்பனையானது. இருப்பினும் பொதுமக்கள் நாட்டு கோழிக்கறி, நாட்டு கோழிமுட்டைகளை கிராமங்களுக்கு சென்று வாங்கி சென்றதை காண முடிந்தது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், வெங்காய விலை உச்சத்தை தொட்டபோது ஓட்டல்களில் ஆம்லெட் ரூ.12, ரூ.15 வரை விற்றனர். அதன் பிறகு வெங்காய விலை குறைந்து விட்டது. தற்போது கோழிமுட்டை, கோழிக்கறி விலை வீழ்ச்சியை சந்திக்கிற போதும் கூட ஆம்லெட், சில்லி சிக்கன் விலை குறையாமல் உள்ளது என கவலை தெரிவித்தனர்.

Next Story