பாலம் கட்டாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


பாலம் கட்டாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 March 2020 10:00 PM GMT (Updated: 21 March 2020 3:34 PM GMT)

பாலம் கட்டாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை தரம் உயர்த்தப்பட்டு 142 கிலோமீட்டர் தூரம் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமம் நைனார் ஏரி நடுவிலும் நடைபெற்று வருகிறது. 

ஆனால் இங்கு, பாலம் அமைக்காமல் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் விவசாய நிலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் நைனார் ஏரியில் பாலம் கட்டாமல் சாலை அமைக்கப்படுவதை கண்டித்து ஜெயங்கொண்டம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story