கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: ரெயிலில் முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெற வழிமுறைகள் மாற்றம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, ரெயிலில் முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெற வழிமுறைகள் மாற்றப்பட்டு உள்ளன.
நெல்லை,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, ரெயிலில் முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெற வழிமுறைகள் மாற்றப்பட்டு உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெற...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான விதிமுறைகளை ரெயில்வே நிர்வாகம் மாற்றி உள்ளது.
அதன்படி இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான விதிமுறைகளில் மாற்றம் இல்லை. இந்த பயணிகள் பயணக்கட்டணத்தை திரும்ப பெற ரெயில் நிலையத்துக்கு வர வேண்டியது இல்லை.
ரெயில்வே முன்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான விதிமுறைகள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாற்றம் நேற்று முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15–ந்தேதி வரையிலும் அமலில் இருக்கும்.
ரெயில் நிலையத்துக்கு வருவதை தவிர்க்க...
ரெயில்வே நிர்வாகம் ரெயிலை ரத்து செய்தால், பயணச்சீட்டை பயண தேதியில் இருந்து 45 நாட்களுக்குள் ரெயில்வே முன்பதிவு அலுவலகத்தில் சமர்ப்பித்து பயண கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்.
ரெயில்வே நிர்வாகம் சார்பில், ரெயிலை ரத்து செய்யாதபோது, பயணிகள் பயணம் செய்ய விரும்பவில்லை என்றால், பயண தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு ஒப்புவிப்பு ரசீது பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த ரசீதினை பதிவு செய்த 60 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கோட்ட வர்த்தக மேலாளருக்கு அனுப்பி வைத்து, பயண கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்.
பயணத்தை தொலைபேசி எண் 139 வழியாக ரத்து செய்தவர்கள், பயண கட்டணத்தை பயண தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் ரெயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். தற்போது பேரிடர் காலத்தில் பயணிகள் இந்த விதிமுறைகள் மாற்றத்தை பயன்படுத்தி, ரெயில் நிலையத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story