கொரோனா எதிரொலி: மதுரை சிறையில் இருந்து பெண்கள் உள்பட 53 கைதிகள் சொந்த ஜாமீனில் விடுவிப்பு


கொரோனா எதிரொலி: மதுரை சிறையில் இருந்து பெண்கள் உள்பட 53 கைதிகள் சொந்த ஜாமீனில் விடுவிப்பு
x
தினத்தந்தி 22 March 2020 6:00 AM IST (Updated: 22 March 2020 1:33 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மத்திய சிறையில் இருந்து பெண்கள் உள்பட 53 கைதிகள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் 900 பேர், விசாரணை கைதிகள் 630 பேர் என மொத்தம் 1,530 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கொேரானா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. அதின் ஒரு பகுதியாக கடந்த 17-ந் தேதியில் இருந்து கைதிகளை பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் கோர்ட்டுக்கு சென்று வரும் கைதிகள் அனைவரும் சிறைக்குள் செல்வதற்கு முன்பாக சுத்தம் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் சிறையில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக சிறிய குற்றவழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளை அவர்களது சொந்த ஜாமீனில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.

ஐகோர்ட்டு நீதிபதி

இதற்காக நீதித்துறை, சிறை துறை, போலீஸ் துறை இணைந்து மதுரை மத்திய சிறையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையில், மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி நஜிமாபானு, போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐ.ஜி.சண்முகராஜேஸ்வரன், மதுரை சிறை துறை டி.ஐ.ஜி. பழனி, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், துணை போலீஸ் கமிஷனர்கள் கார்த்திக், பழனிகுமார், சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா மற்றும் நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது சிறிய குற்ற வழக்குகளில் சிறையில் இருக்கும் ஆண், பெண் குற்றவாளிகளில் யார், யாரை விடுவிக்கலாம் விவாதிக்கப்பட்டது.. இதற்காக மதுரை நகர், மாவட்டத்தில் உள்ள 58 இன்ஸ்பெக்டர்கள், 30 சப்-இன்ஸ்பெக்டர்களும் வந்திருந்தனர்.

53 கைதிகள் விடுவிப்பு

அதன் அடிப்படையில் சிறையில் இருக்கும் 300 சிறு குற்றம் செய்தவர்களை சொந்த ஜாமீனில் விடுவிக்க முடிவு செய்ய விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஒரு சில குற்றவாளிகளை வெளியே விடுவதற்கு போலீசார் சம்மதம் ெதரிவிக்கவில்லை.

காலையில் தொடங்கிய கூட்டம் மாலை வரை நடந்தது. கூட்டத்தின் முடிவில் மதுரை மத்திய சிறையில் இருந்து 51 ஆண்கள், 2 பெண்கள் என 53 விசாரணை கைதிகளை சொந்த ஜாமீனில் விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி நேற்று மாலை அவர்கள் அனைவருக்கும் கோர்ட்டு வழங்கிய ஜாமீனின் அடிப்படையில் சிறை நிர்வாகம் அவர்களை விடுவித்தது. இது தவிர மதுரை மத்திய சிறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிளை சிறையில் இருந்து சிவகங்கையில் 4 பேரும், திருப்பத்தூர், அருப்புக்கோட்டையில் தலா ஒருவரும், தேனியில் 22 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் முதன் முறையாக

இது குறித்து மதுரை சரக சிறை துறை டி.ஐ.ஜி. பழனி கூறியதாவது:- மதுரை மத்திய சிறையில் கைதிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே இங்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்து ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதியிடம் தெரிவித்தோம். அவரின் முயற்சியின் பலனாக போலீஸ்துறை, நீதித்துறை இணைந்து மதுரை நகர் மற்றும் மாவட்டங்களில் சிறு குற்றங்களை செய்தவர்களை ெசாந்த ஜாமீனில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக யார், யாரை விடுவிப்பது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டோம்.

இதற்காக ஐகோர்ட்டு நீதிபதி நேரடியாக சிறைக்கு வந்து விசாரணை நடத்தி 2 பெண்கள் உள்பட 53 பேரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். அதன்அடிப்படையில் தமிழகத்தில் முதல் முறையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தவிர மதுரை மத்திய சிறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிளை சிறையில் உள்ள 28 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒரே நாளில் மொத்தம் 81 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் வருகிற திங்கட்கிழமை (நாளை) வேறு மாவட்ட கைதிகளை விடுவிப்பது குறித்து கூட்டம் நடத்தி, அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story