இன்று கடைகள் அடைப்பு எதிரொலி: காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்


இன்று கடைகள் அடைப்பு எதிரொலி: காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 22 March 2020 4:30 AM IST (Updated: 22 March 2020 2:24 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று கடைகள் அடைக்கப்படுவதால் காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்க திண்டுக்கல்லில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

திண்டுக்கல்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. இதில் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்து விடலாம். இதற்காக நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கும்படி பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதனால் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையொட்டி இன்று நாடு முழுவதும் ரெயில்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

கடைகள் அடைப்பு

மேலும் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. அதேபோல் வாரச்சந்தைகள், காய்கறி மார்க்கெட்டுகள், ஓட்டல்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பொதுவாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தான் மக்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்குவார்கள். அதிலும் வேலைக்கு செல்வோருக்கு ஞாயிற்றுக்கிழமை தான் பொருட்கள் வாங்கும் நாள் ஆகும். இதற்கிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யாரும் வெளியே வரவேண்டாம் என்றதோடு, கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் நேற்றே பொருட்களை வாங்க தொடங்கினர்.

பொருட்கள் வாங்க குவிந்தனர்

திண்டுக்கல்லை பொறுத்தவரை வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் நேற்று முன்தினம் முதல் அடைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று காய்கறி மார்க்கெட், வாரச்சந்தை மற்றும் மளிகை கடைகள் அடைக்கப்படும் என்பதால் தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்குவதற்கு கடைவீதியில் மக்கள் குவிந்தனர்.

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் வழக்கத்தை விட நேற்று காலை 8 மணிக்கே மக்கள் காய்கறிகளை வாங்குவதற்காக குவிந்தனர். மேலும் நேரம் செல்ல, செல்ல காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுதவிர நாகல்நகர் தினசரி சந்தை உள்பட நகரில் உள்ள அனைத்து காய்கறி சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

விலை உயர்வு

அதேநேரம் பெரும்பாலான மக்கள் 5 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, கத்தரிக்காய், கேரட், முருங்கைக்காய், வெங்காயம் ஆகியவை அதிக அளவில் விற்பனை ஆகின. இதன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலை நேற்று உயர்ந்தது.

அதேபோல் மளிகை பொருட்களையும் அதிக அளவில் மக்கள் வாங்கி சென்றனர். இதற்காக திண்டுக்கல் மேற்குரத வீதி, கடைவீதி உள்பட முக்கிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் காலை முதல் மாலை வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக கடைவீதி, மெயின்ரோடு, தாலுகா அலுவலக சாலை, மார்க்கெட் சாலை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல்

கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட், வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இவை தினசரி மதுரை, திருச்சி, பழனி போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கொடைக்கானலுக்கு காய்கறிகள் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே கொடைக்கானல் நகரில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காய்கறி சந்தை நடைபெறும். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சந்தைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நேற்று காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கி சென்றனர். சிறிய விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்தனர்.


Next Story