திருப்பூரில் குடிபோதையில் தகராறு: கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை


திருப்பூரில் குடிபோதையில் தகராறு: கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 March 2020 5:30 AM IST (Updated: 22 March 2020 2:40 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் முனிசிபல் வீதியில் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு பின்புறம் வீரசிவக்குமார் என்பவருக்கு சொந்தமான பழைய கட்டிடம் உள்ளது.

இந்த கட்டிடத்தில் தங்கியிருந்து இளைஞர்கள் 2 பேர் அங்கு தோட்ட வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அந்த கட்டிடத்தில் இளைஞர்கள் இருந்துள்ளனர். இரவு 11 மணி அளவில் அந்த கட்டிடத்தில் இருந்த இளைஞர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதைக்கேட்ட அருகில் இருந்த கட்டிடத்தின் காவலாளிகள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

வாலிபர் கொலை

இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து அந்த கட்டிடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த கட்டிடத்துக்குள் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொலையானவர் ஊட்டியை சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு நேற்று காலை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

2 பேரை பிடித்து விசாரணை

விக்னேசின் பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாபுலால், மன்சூர் அலிகான் ஆகிய 2 பேரையும் தெற்கு போலீசார் பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடிபோதையில் தகராறு

முதல்கட்ட விசாரணையில் விக்னேசுடன் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்த பாபுலால்(31) தோட்ட வேலை செய்து வந்துள்ளார். பாபுலாலின் நண்பரான கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்த மன்சூர் அலிகான்(27) நேற்று முன்தினம் அந்த கட்டிடத்துக்கு வந்துள்ளார்.

இரவு 3 பேரும் சேர்ந்து மது அருந்தியதும், அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பாபுலாலும், மன்சூர் அலிகானும் சேர்ந்து விக்னேசை கத்தியால் கழுத்தை அறுத்தும், பாட்டிலால் நெற்றியில் குத்தியும் கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. 

Next Story