மக்கள் ஊரடங்கையொட்டி கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை துறைமுகம் வெறிச்சோடியது


மக்கள் ஊரடங்கையொட்டி கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை துறைமுகம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 22 March 2020 4:30 AM IST (Updated: 22 March 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் ஊரடங்கையொட்டி கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுகம் வெறிச்சோடியது.

கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சோனங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

அவ்வாறு மீனவர்கள் வலையில் சிக்கிய மீன்கள், கடலூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீன்களை வியாபாரிகள் வாங்கி, லாரிகள் மூலம் பிற மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

மீன்பிடிக்க செல்லவில்லை

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கு நடைபெற உள்ளது. இதையொட்டி மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பஸ்கள், லாரிகள் ஓடாது. மேலும் கடைகள், ஓட்டல்கள் இயங்காது.

மக்கள் ஊரடங்கையொட்டி நேற்று முதல் கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி படகுகள், பைபர் படகுகள் கடலூர் துறைமுகத்திலும், கடற்கரையிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது. இதன் காரணமாக கடலூர் துறைமுகம் மீனவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல இன்றும் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லமாட்டார்கள் என்று மீனவர்கள் தெரிவித்தனர். 

Next Story