சுய ஊரடங்குக்கு ஆதரவு: மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்லவில்லை


சுய ஊரடங்குக்கு ஆதரவு: மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்லவில்லை
x
தினத்தந்தி 22 March 2020 5:00 AM IST (Updated: 22 March 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

சுய ஊரடங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்லவில்லை.

சென்னை,

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என வேண்டுகொள் விடுத்தார். இதையடுத்து இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து சுய ஊரடங்கு முழுமையாக நடைபெற பல்வேறு அரசு துறைகள் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் இன்று ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பஸ்கள் அனைத்தும் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் சுய ஊரடங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்லவில்லை. இதுகுறித்து அகில இந்திய மீனவர்கள் சங்கத்தின் தேசிய செயல் தலைவர் நாஞ்சில் ரவி கூறியதாவது:-

கடலுக்கு செல்லவில்லை

தமிழகத்தில் அடுத்த மாதம்(ஏப்ரல்) மீன்பிடி தடைகாலம் வருகிறது. இதனால் தற்போது தான் மீனவர்கள் அனைவரும் மிக அதிகமாக மீன் பிடி தொழிலில் தீவிரமாக ஈடுபடும் நேரம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்கள் சார்பில் இதை பாராட்டுகிறேன்.

மேலும் சுய ஊரடங்கை கடைபிடிக்கவும் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாளை(இன்று) நடைபெறும் இந்த சுய ஊரடங்குக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள 12 கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என முடிவு செய்துள்ளோம். இதனால் சென்னை காசிமேட்டில் 2 ஆயிரத்து 500 விசைப்படகுகளும், 8 ஆயிரத்து 500 ‘பைபர்’ படகுகளும் கடலுக்குள் செல்லவில்லை. மேலும் இவ்வாறு வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மீனவர்களுக்கு, மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் உதவி தொகை போன்று தற்போது வழங்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாது அவர் கூறினார்.

Next Story