நாளை முதல் 31-ந்தேதி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு


நாளை முதல் 31-ந்தேதி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 March 2020 12:28 AM GMT (Updated: 22 March 2020 12:28 AM GMT)

புதுச்சேரியில் நாளை முதல் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். தேவையில்லாமல் பொதுமக்கள் கூட்டம் சேர வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேகமாக பரவுகிறது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது.

ஆரோவில்லுக்கு நிறைய வெளிநாட்டினர் வருகின்றனர். அவர்கள் புதுவைக்கும் வருகிறார்கள். இங்கேயே தங்குகிறார்கள். அவர்களை கண்காணிப்பது சிரமமாக உள்ளது. எனவே நமது கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். ஏற்கனவே கடந்த 14-ந்தேதி முதல் ஆரோவில்லில் வெளிநாட்டினர் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு

குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவரை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அரசு பொது மருத்துவமனைக்கு அதிக அளவில் வரவேண்டாம். அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

நாளை (திங்கட்கிழமை) முதல் புதுவை மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் பொருட்கள் வாங்கிட கடைகள் திறந்திருக்கும். குறிப்பாக உணவு பொருட்கள் கடை, மருந்து கடைகள், பால் கடைகள் எந்த நேரமும் திறந்திருக்கும்.

இந்த உத்தரவின்படி பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூடக்கூடாது. கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் சேரவேண்டாம்.

வாகன கட்டுப்பாடு

புதுவை மாநிலத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் வருகின்றன. இது குறைக்கப்பட வேண்டும். குறிப்பாக தமிழக பகுதியிலிருந்து நிறைய வாகனங்கள் வருகின்றன. வருகிற 31-ந்தேதி வரை அவற்றை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அவற்றின் மீது முழுமையான கட்டுப்பாடு விதிக்கப்படும்.

அத்தியாவசியமானவற்றுக்கு புதுச்சேரி வரலாம். அவர்களை கலெக்டர் மற்றும் எல்லைப்பகுதிகளில் உள்ள மருத்துவ குழுவினர் கண்காணிப்பார்கள்.

தொழிற்சாலைகள்

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி புதுவை அரசுத்துறைகளில் நாளை முதல் அரசு ஊழியர்கள் ஷிப்டு முறையில் பணியாற்ற உள்ளனர். முதல் வாரம் 50 சதவீத ஊழியர்களும், அடுத்த வாரம் மீதி 50 சதவீத ஊழியர்களும் பணியாற்றுவார்கள்.

தொழிற்சாலைகளில் கும்பலை தடுக்கவேண்டும் என்று உரிமையாளர்கள் கோரப்பட்டுள்ளனர். வெளிநாட்டினரையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தள்ளிவைப்பு

புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் புதியதாக யாரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை. மாகியில் மூதாட்டி ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தேறிவருகிறது. அவருடன் இருந்த அவரது மருமகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

பொதுமக்கள் நலனுக்காக காவல்துறை, சுகாதாரத்துறை என அரசுத்துறைகள் தொடர்ந்து இயங்கும். பொதுமக்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் தள்ளிவைக்கப்படுகிறது. சாலையோரம் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும். கள், சாராயம், மதுபான கடைகளும் மூடப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story