கொரோனா வைரஸ் தடுப்பு சுய ஊரடங்கு: ஈரோட்டில் அனைத்து கடைகளும் அடைப்பு வீட்டுக்குள் முடங்கிய பொதுமக்கள்


கொரோனா வைரஸ் தடுப்பு சுய ஊரடங்கு: ஈரோட்டில் அனைத்து கடைகளும் அடைப்பு வீட்டுக்குள் முடங்கிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 23 March 2020 3:00 AM IST (Updated: 23 March 2020 12:22 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு சுய ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பொதுமக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

ஈரோடு, 

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் பொது ஊரடங்கு நேற்று பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி பொதுமக்கள் நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருந்து கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த அழைப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், வணிகர் சங்கத்தினர், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஈரோட்டில் நேற்று காலை முதல் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்தனர். மேலும் காய்கறி கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் பூட்டப்பட்டன. நேற்று காலையில் ஒரு சில டீக்கடைகளும், இறைச்சி கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. எனினும் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால், திறக்கப்பட்ட கடைகளும் சிறிது நேரத்தில் அடைக்கப்பட்டன. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று பிரார்த்தனை நடைபெறவில்லை.

மருந்து கடைகள், ஆம்புலன்ஸ் சேவை, அரசு ஆஸ்பத்திரி, அம்மா உணவகங்கள், ஆவின் பால் நிலையங்கள் திறக்கப்பட்டு இருந்தன. ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 197 மதுக்கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன. இதில் 105 டாஸ்மாக் கடைகளில் பார் வசதி உள்ளது. இந்த பார்கள் அனைத்தும் வருகிற 31-ந்தேதி வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்பட்டன. ஆனால் குறைந்த அளவே ஊழியர்கள் பணியில் இருந்தனர். நேற்று முகூர்த்த தினம் என்பதால் ஏற்கனவே இந்த நாளில் திருமணம் முடிவு செய்த தம்பதிகளும் தங்களது திருமண நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து விட்டனர். ஒரு சில இடங்களில் அதிகாலையிலேயே திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு சில இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்தனர். வீட்டுக்குள் முடங்கி கிடந்த பொதுமக்கள் டி.வி. பார்த்தும், செல்போனில் விளையாடியும், புத்தகங்களை வாசித்தும் தங்களது பொழுதை இனிதாக கழித்தனர்.

Next Story