மக்கள் ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு; சென்னை புறநகர் பகுதிகள் வெறிச்சோடியது


மக்கள் ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு; சென்னை புறநகர் பகுதிகள் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 22 March 2020 10:00 PM GMT (Updated: 22 March 2020 7:41 PM GMT)

மக்கள் ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வீடுகளுக்குள் முடங்கியதால் சென்னை புறநகர் பகுதிகள் வெறிச்சோடின.

ஆவடி,

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பிரதமர் மோடி வேண்டுகோளின்படி நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் ஊரடங்கு நடைபெற்றது.

பொதுமக்கள் அமோக ஆதரவு அளித்து, நேற்று காலை 7 மணிக்கு மேல் யாரும் வீ்ட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் இருந்தனர். மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஆட்டோ, பஸ், வேன், கார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்லாமல் சாலையே வெறிச்சோடி காணப்பட்டது.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் ஆவடி-பூந்தமல்லி சாலை, ஆவடி புதிய ராணுவ சாலை, திருமுல்லைவாயல், பட்டாபிராம், உள்ளிட்ட பகுதிகளில் ரெயில் நிலையம், பஸ் நிலையம், வணிக வளாகம், வீடுகள், முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் லாரிகளில் சென்று கிருமி நாசினி தெளித்தனர்.

அதேபோல் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11-வது மண்டலம் சார்பில் போரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சாலையோரம் பூட்டியிருந்த கடைகள், சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டனர். கிருமி நாசினி நிரப்பப்பட்ட லாரியிலிருந்து எந்திரம் மூலம் ஸ்பிரே அடித்தனர்.

பூந்தமல்லி பகுதியில் கோவில்கள், மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் முற்றிலும் மூடப்பட்டு இருந்தன. காலியாக உள்ள சாலையில் சிலர் இரு சக்கர வாகனங்களில் செல்பி எடுத்த படியும், செல்போனில் வீடியோ பதிவு செய்த படியும் சென்றனர். அவர்களை போலீசார் மடக்கி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

பெரம்பூர் ரெயில் நிலையம், பெரம்பூர் நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலைகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, வாகன போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடி கிடந்தது.

செங்குன்றம் பஸ்நிலையம், ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் ஆந்திரா பஸ் அடுக்குமாடி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆலந்தூர், ஆதம்பாக்கம், பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையும் வெறிசோடியது. ஓட்டல்கள் மூட்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் மதிய உணவு கிடைக்காமல் அவதிபட்ட விமான பயணிகளுக்கு உணவு பொட்டலம் தண்ணீர் பாட்டில்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக இளைஞர்கள் வழங்கினர்.

காசிமேடு மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. காசிமேடு மீன் மார்க்கெட் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்களின்றி வெறிச் சோடி காணப்பட்டது.

Next Story