விளாத்திகுளம் அருகே பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு
விளாத்திகுளம் அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரத்தைச் சேர்ந்தவர் ஜோதி முத்து. லாரி டிரைவரான இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி உஷாராணி. இவருக்கு சீமான் அல்போன்ஸ் மைக்கிள் (வயது 14) என்ற மகன் உண்டு. 2-வது மனைவி மகாலட்சுமிக்கு எட்வின் ஜோசப் (9) என்ற மகன் உண்டு.
இதில் சீமான் அல்போன்ஸ் மைக்கிள் விளாத்திகுளத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். எட்வின் ஜோசப் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று இவர்களுடைய உறவினர் ஒருவர் 2 சிறுவர்களையும் அங்குள்ள கிணற்றில் குளிப்பதற்காக அழைத்து சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மட்டும் கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்தனர்.
வெகுநேரம் ஆகியும் சிறுவர்கள் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கிணற்றுக்கு சென்று தேடிப்பார்த்தனர். அப்போது, கிணற்றில் சிறுவர்களின் செருப்பு மிதந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினார்கள். அப்போது, எட்வின் ஜோசப் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். ஆனால் சீமான் அல்போன்ஸ் மைக்கிளை தேடினார்கள். ஆனால் அவனது உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவனது உடலை தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே, போலீசார் எட்வின் ஜோசப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கிணற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி 2 பேரும் இறந்து இருக்கலாம் என்று தெரியவந்தது. கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story