31-ந் தேதி வரை ரெயில்கள் ஓடாது: திருச்சி ஜங்ஷன் நுழைவுவாயில் தடுப்புகள் வைத்து மூடல் - டிக்கெட் கவுண்ட்டரும் அடைப்பு
31-ந் தேதி வரை ரெயில்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டதால் திருச்சி ஜங்ஷன் நுழைவு வாயில் தடுப்புகள் வைத்து மூடப்பட்டது. டிக்கெட் கவுண்ட்டரும் அடைக்கப்பட்டது.
திருச்சி,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நேற்று ஊரடங்கை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடித்தனர். வீட்டை விட்டு வெளியில் யாரும் வரவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதேபோல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு முழுவதும் 31-ந் தேதி வரை பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் என அனைத்து ரெயில்களும் இயக்கப்படாது என அறிவிப்பு வெளியானது.
ரெயில்கள் ஓடாது என அறிவிப்பு வெளியானதையடுத்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நுழைவு வாயிலில் நேற்று தடுப்புகள் அமைத்து மூடப்பட்டது. மேலும் ஜங்ஷன் ரவுண்டானா முன்பு உள்ள அலங்கார வளைவு அருகேயும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தடுப்புகள் அமைத்தனர். ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் முன்பும் தடுப்புகள் அமைத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரெயில் நிலையத்தின் உள்ளே நடைமேடைகளுக்கு செல்லும் வழிகளும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர் நுழைவு வாயில் முன்பு ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் மையம் நேற்று மூடப்பட்டது. ரெயில்கள் நடைமேடைகளிலும், யார்டிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ரெயில் நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இரவில் மின் விளக்குகளும் குறைந்த அளவே எரிந்தன. ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஒரு சிலர் பணியில் இருந்தனர். வருகிற 31-ந் தேதி வரை கவுண்ட்டர்களில் முன்பதிவு டிக்கெட் வினியோகம் கிடையாது. ஆனால் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் ‘புக்’ செய்யலாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். யு.டி.எஸ். செயலியும் 31-ந் தேதி வரை இயங்காது.
இதற்கிடையில் ரெயில்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டது பற்றி தெரியாத ஒரு சில பயணிகள் நேற்று இரவு 10 மணிக்கு மேல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஓடும் என எதிர்பார்த்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் நிலைய நுழைவு வாயிலுக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தி திருச்சியில் இருந்து புறப்படும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் எந்த ரெயில்களும் இயக்கப்படாதது குறித்து எடுத்துக்கூறி அனுப்பி வைத்தனர். இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதேபோல் இரவு 9 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்படலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் திருச்சி மத்திய, சத்திரம் பஸ் நிலையங்களில் இருந்து நேற்று இரவும் பஸ்கள் இயக்கப்படவில்லை. மத்திய பஸ் நிலையத்தில் ஒரு சில வெளியூர் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களிடம் நிலைமையை போலீசார் எடுத்துக்கூறினர். ரெயில், பஸ்கள் எதுவும் இல்லாததால் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணிகள் நேற்று இரவு திருச்சியில் தவித்தனர்.
திருச்சி மாநகரில் இரவிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று மாலை 6 மணிக்கு மேல் மத்திய பஸ் நிலைய பகுதிகளில் ஒரு சில டீக்கடைகள் திறக்கப்பட்டன. அந்த கடைகள் முன்பு பொதுமக்கள் கூட்டம் கூட தொடங்கியதால், கடைகளை அடைக்க போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து திறந்த டீக்கடைகள் மூடப்பட்டன.
Related Tags :
Next Story