திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த மருத்துவ பாதுகாப்பு ஒத்திகை - கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு


திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த மருத்துவ பாதுகாப்பு ஒத்திகை - கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
x
தினத்தந்தி 22 March 2020 10:30 PM GMT (Updated: 22 March 2020 10:53 PM GMT)

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நடந்த கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த மருத்துவ பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான மருத்துவ பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19-ந்தேதி, கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்படியே தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டு வெளியே செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் அனைத்து வணிக வளாகங்கள், நிறுவனங்கள் மூடி வைக்கப்பட்டு, போக்குவரத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கி உள்ளனர்.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த மருத்துவ பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒருவர் அனுமதிக்கப்படும்போது கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகளையும், தேவையான மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு குறித்து விரிவாக ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக களத்தில் வீரத்துடன் களப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி துறை பல்வேறு அரசுத்துறைகள், விமானத்துறை, ஊடகவியலாளர்கள், பஸ், ரெயில், ஆட்டோ, வீடு தேடி வந்து அத்தியாவசிய பொருட்களை விற்பவர்கள் என தன்னலமற்ற சேவை புரிபவர்களை பாராட்டும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்கள் வீட்டின் மாடியில் நின்று அவர்களுக்கு மரியாதை மற்றும் நன்றி தெரிவிக்கும் விதமாக கை தட்டுவது அல்லது வீட்டில் மணியை ஒலித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அரசு தலைமை மற்றும் ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லால், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சேகர், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயராஜ், ஆஸ்பத்திரி நிலை அலுவலர் ராஜ்குமார், சைதன்யா திருவள்ளூர் தாசில்தார் விஜயகுமாரி மற்றும் திரளான மருத்துவர்கள் செவிலியர்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story