கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு: ஒட்டுமொத்த புதுச்சேரியும் முடங்கியது


கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு: ஒட்டுமொத்த புதுச்சேரியும் முடங்கியது
x
தினத்தந்தி 22 March 2020 11:03 PM GMT (Updated: 22 March 2020 11:03 PM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த புதுச்சேரியும் நேற்று முடங்கியது. வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

புதுச்சேரி, 

உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்த தொற்றினால் நாடு முழுவதும் 370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க தனியாக இருப்பதே சிறந்தது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க (மக்கள் ஊரடங்கு) பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று மக்கள் ஊரடங்கு நேற்று நாடு முழுவதும் நடந்தது.

புதுவையை பொறுத்தவரை இந்த ஊரடங்கு காலை 7 மணிக்கு தொடங்கியது. அதிகாலையில் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் 7 மணிக்கு முன்னதாகவே அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன.

புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் என எதுவும் ஓடவில்லை. இதேபோல் ஆட்டோ, டெம்போ போன்ற வாகனங்களும் ஓடவில்லை. புதுவையிலிருந்து இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன.

புதுவை நகரப்பகுதியில் அனைத்து ஓட்டல்களும், வணிக நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டிருந்தன. தள்ளுவண்டி கடைகளும் சாத்தப்பட்டிருந்தன. புறநகர் பகுதிகளில் மட்டும் சில சிறிய கடைகள் திறந்திருந்தன.

புதுவை பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை மார்க்கெட்டுகள், கிழக்கு கடற்கரை சாலை நவீன மீன் அங்காடி, உழவர்சந்தைகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் சண்டே மார்க்கெட்டும் தடை செய்யப்பட்டது.

கடற்கரை சாலையும் மூடப்பட்டிருந்தது. சர்வதேச நகரான ஆரோவில் 3 நாட்களுக்கு முன்பே மூடப்பட்டது. ஏற்கனவே கோவில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

பாண்லே பாலகங்கள், மருந்துகடைகள் போன்றவை திறந்திருந்தன. சில பெட்ரோல் பங்குகளும் இயங்கின.

புதுவையில் முழு அடைப்பு காலங்களில் கூட டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படும். ஆனால் நேற்றைய தினம் வாகனப் போக்குவரத்து என்பது முழுமையாக முடங்கியது. அவசர தேவைகளுக்காக மட்டுமே ஒரு சில வாகனங்கள் இயக்கப்பட்டன.

பஸ்கள் ஓடாததாலும், வணிக நிறுவனங்கள் திறக்கப்படாததாலும் புதுச்சேரியில் மயான அமைதி நிலவியது. பொதுமக்களும் பயம் கலந்த பீதியுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.

வாகனங்கள் ஓடாததால் புதிய பஸ் நிலையம், மறை மலையடிகள் சாலை, காமராஜ் சாலை, நேரு வீதி, 100 அடி ரோடு என அனைத்து பகுதிகளிலும் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

வழக்கமாக விடுமுறையில் வீட்டைவிட்டு வெளியேவந்து விளையாடும் மாணவ, மாணவிகள்கூட நேற்று வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

பெரியவர்கள், பெண்கள் என ஒட்டுமொத்தமாக குடும்பத்தினர் வெளியில் தலைகாட்டவே அச்சப்பட்டனர். அவசர தேவைகளுக்காக மட்டுமே சிலர் வீட்டைவிட்டு வெளியே வந்தனர்.

பால், மருந்து பொருட்களை வாங்க வந்தவர்கள் ஒரு சில நிமிடங்களிலேயே தங்களது வீடுகளுக்கு திரும்பியதை காண முடிந்தது. முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை, அவர்கள் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.

புறநகர் பகுதிகளான அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், பாகூர், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை, திருவண்டார்கோவில், மதகடிப்பட்டு, காலாப்பட்டு ஆகிய பகுதியிலும் ஊரடங்கு காரணமாக மக்கள் காலை முதல் இரவு வரைவீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இதனால் ஒட்டுமொத்த புதுச்சேரியும் நேற்று முழுவதும் முடங்கி இருந்தது.

Next Story