மக்கள் ஊரடங்கு; மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது


மக்கள் ஊரடங்கு; மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது
x
தினத்தந்தி 23 March 2020 5:00 AM IST (Updated: 23 March 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் ஊரடங்கு உத்தரவையொட்டி மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

ராமநாதபுரம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் நேற்று ஒருநாள் மக்கள் ஊரடங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். ெகாரோனா வைரசுக்கு எதிரான நமது போர் வெற்றி பெறட்டும். வீட்டிற்குள்ளேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்றும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியில் வராமல் இருங்கள் என்று அறிவித்து இருந்தார். பிரதமரின் இந்த வேண்டுகோளின்படி தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன்படி மாவட்டத்தில் மக்கள் அனைவரும் வெளியில் வராமல் வீடுகளுக்குள் இருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய பகுதி, பாரதிநகர், பழைய பஸ்நிலைய பகுதி, சாலைத்தெரு, அரசு ஆஸ்பத்திரி ரோடு, அரண்மனை, வண்டிக்காரத்தெரு, கேணிக்கரை, சிகில்ராஜ வீதி, யானைக்கல் வீதி, சின்னக்கடை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு முதல் முன்அறிவிப்புடன் பஸ் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டதால் மக்கள் தங்கள் பயணங்களை தவிர்த்து கொண்டனர். பஸ்கள் வராததால் பஸ் நிலைய பகுதி முழுவதும் பஸ்கள் மற்றும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தியேட்டர்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டதால் மக்கள் ஊரடங்கை பயன்படுத்தி யாரும் வெளியில் செல்ல முடியவில்லை.

ஒரு சில மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள், பால் பூத்துகள் மட்டும் திறந்திருந்தன. பாரபட்சமின்றி பொதுமக்கள் அரசின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்ததால் ராமநாதபுரம் நகர் மட்டுமின்றி மாவட்டமே வெறிச்சோடி காணப்பட்டது.

எந்த வாகனங்களும் ஓடாமல் இருந்ததாலும், கடைகள் வெளியில் பரப்பி வைக்கப்படாததாலும் அனைத்து சாலைகளும் பரந்து விரிந்து விசாலமாக காட்சியளித்தது. ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்ததால் ரெயில் நிலைய பகுதி முழுவதும் ஆள்நடமாட்டமின்றி காணப்பட்டது.

ராமநாதபுரம் நகரில் அதிகாலையில் வழக்கம்போல ஒரு சில பெட்டிக்கடைகள் திறந்திருந்தன. அந்த கடைகளையும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அடைக்குமாறு கூறினர். மீன்கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்டவைகளும், காய்கறி கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தங்களுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். அதிகாலை பூஜைகளுடன் கோவில்கள் அடைக்கப்பட்டு இதர வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் முககவசம் அணிந்தபடி வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் நகரில் ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள் தவிர அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஆஸ்பத்திரிகளிலும் உள்நோயாளிகளை தவிர வெளிநோயாளிகள் யாரும் செல்லவில்லை. இதனால் பரபரப்பாக காணப்படும் தனியார் ஆஸ்பத்திரிகள் கூட அமைதியாக காணப்பட்டன.

அகில இந்திய புண்ணியதலமான ராமேசுவரம் கோவிலில் வருகிற 31-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. ஓரிடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளது.ராமேசுவரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அக்னி தீர்த்த கடற்கரை, நான்கு ரத வீதி, திட்டகுடி சந்திப்பு, பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ராமேசுவரத்தில் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. குறிப்பாக கோவில் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ராமேசுவரம் துறைமுக பகுதி, பாம்பன் கடற்கரை ஆகியவை ஆள்நடமாட்டமின்றி காணப்பட்டது.

ராமேசுவரம் நகர் முழுவதும் தாசில்தார் அப்துல் ஜப்பார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை கடற்கரைக்கு செல்ல வருகிற 31-ந்தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி புதுரோடு பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமேசுவரத்தில் மருத்து கடைகளை தவிர வேறு எந்த கடைகளும் திறக்கப்படவில்லை.

பரமக்குடியில் நேற்று பொதுமக்கள் யாரும் அதிகாலை முதல் வெளியில் வராமல் மக்கள் ஊரடங்கை கடைபிடித்தனர். ஆட்டோக்கள், லாரிகள், வாடகை கார்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் முழுமையாக இயங்காததால் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

பரமக்குடி நகரில் எப்போதும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பஸ் நிலையம், பெரிய கடை வீதி, நகைக்கடை பஜார், சின்னக்கடை பஜார் ஆகிய பகுதிகளில் ஒரு கடைகள் கூட திறக்கப்படாமல் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 7 மணி வரை இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நகரில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்தும் வருகிற 31-ந்தேதி வரை திறக்கப்படமாட்டாது. நேற்று போலீசார் நகர் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்ததுடன் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவாடானை தாலுகாவில் மக்கள் ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து நேற்று தொண்டி, திருவாடானை, வெள்ளையபுரம், மங்களக்குடி, எஸ்.பி.பட்டினம், பாண்டுகுடி, சி.கே.மங்கலம், நம்புதாளை, ஆண்டாவூரணி, என்.எம்.மங்கலம், ஊரணிக்கோட்டை, அஞ்சுகோட்டை, தினையத்தூர், திருவெற்றியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல அரசின் உத்தரவை முழுமையாக பின்பற்றிய பொதுமக்கள் காலை முதல் இரவு வரை வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இதனால் கடை வீதிகளும், மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் தங்களது ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் வீடுகளில் கட்டி போட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை இணைக்கும் இடம் என்பதால் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களை நிறுத்தி கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினர். இந்த பணியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைதேகி, சுகாதார மேற்பார்வையாளர் சந்தனராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்முடியப்ப தாஸ், ஊராட்சி செயலாளர்கள் குமார், மார்க்கண்டேயன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story