கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவு: சேலத்தில் வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்
கொரோனா வைரஸ் பரவு வதை தடுக்க மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நேற்று சேலத்தில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் கடைகள் அடைக்கப்பட்டதுடன், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சேலம்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு’ பிறப்பிக்கப்படுவதாகவும், இதனால் அனைத்து மக்களும் தங்களது வீடுகளில் இருந்து வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் மற்றும் ரெயில்களின் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருந்தனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் முற்றிலும் இயக்கப்படவில்லை.
அரசு போக்குவரத்துக்கழகத்தில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மொத்தம் 18 பணிமனைகள் உள்ளன. இதன் மூலம் 557 புறநகர் பஸ்களும், 490 நகர பஸ்களும் தினமும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் நேற்று இயக்கப்படவில்லை. அந்தந்த பணி மனைகளில் பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சேலம் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல், ஜங்ஷன் மெயின்ரோடு, திருவாக்கவுண்டனூர் பைபாஸ், 3 ரோடு, 4 ரோடு, 5 ரோடு, பழைய பஸ் நிலையம், குரங்குச்சாவடி, அஸ்தம்பட்டி உள்பட மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடின. சேலம் மாநகரில் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், சூரமங்கலம், செவ்வாய்பேட்டை, அழகாபுரம், அஸ்தம்பட்டி, திருச்சி மெயின்ரோடு, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்ஷன் உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள சிறிய மற்றும் பெரிய மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், காய்கறி சந்தைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
வர்த்தக கேந்திரமாக விளங்கும் செவ்வாய்பேட்டை, லீ பஜாரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சேலம் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாக வணிகர்கள் தெரிவித்தனர்.
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் எப்போதும் பயணிகளின் கூட்டம் பரபரப்பாக காணப்படும். ஆனால் நேற்று காலை முதல் இரவு வரையிலும் பயணிகள் வராததால் நடைமேடைகள் வெறிச்சோடி இருந்தன. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கக்கூடாது என்பதால் மருந்து கடைகள் வழக்கம்போல் திறந்து இருந்தன. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அவசர மருந்துகளை பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மருந்து கடைகளுக்கு வந்து வாங்கி சென்றதை காணமுடிந்தது.
பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. இருந்தபோதிலும், இருசக்கர வாகன ஓட்டிகளும், கார்களை ஓட்டி வந்த சிலர் மட்டுமே அங்கு வந்து பெட்ரோல், டீசலை தங்களது வாகனங்களில் நிரப்பி சென்றனர். இருந்தாலும் வழக்கம்போல் காணப்படும் கூட்டம் இல்லை.
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, தாதகாப்பட்டி மற்றும் புறநகரில் எடப்பாடி, ஜலகண்டாபுரம் உள்பட 11 உழவர் சந்தைகள் உள்ளன. இந்த உழவர் சந்தைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டு இருந்தன. அதேபோல், தினசரி காய்கறி மார்க்கெட்களும் திறக்கப்படவில்லை.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டு இருந்தன. சேலத்தில் கோட்டை பெருமாள் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், ராஜகணபதி கோவில், எல்லைப்பிடாரி யம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களும் மூடப்பட்டு இருந்தன.
அதேபோல் சேலம் 4 ரோடு அருகே உள்ள குழந்தை ஏசு பேராலயம் உள்பட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் வழக்கம்போல் திறந்து இருந்தாலும் அங்கு கிறிஸ்தவர்கள் யாரும் செல்லவில்லை. இதனால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் நடக்கும் சிறப்பு பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டது. மேலும், பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம்கள் செல்லவில்லை.
பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவிப்பை ஏற்று அனைத்து மக்களும் வெளியே வராமல் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்தனர். காலை 7 மணி முதல் இரவு வரையிலும் சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. சேலத்தில் மக்கள் ஊரடங்கையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story