ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - பணியாளர்கள் கோரிக்கை


ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - பணியாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 March 2020 8:30 PM GMT (Updated: 23 March 2020 5:03 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஓய்வூதியர்கள் கூட்டம், வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போடுவதற்காக, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது தெரியாமல், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலத்துக்கு நேற்று பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த புகார் பெட்டிகளில் போட்டுச்சென்றனர்.

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள், பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் சுரேஷ், கோவை மண்டல தலைவர் நந்தகோபால், ஈரோடு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த புகார் பெட்டியில் கோரிக்கை மனு ஒன்றை போட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் கூறியதாவது:-

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நோய் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒருநாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று ஈரோடு மாவட்டத்தில் பரவியுள்ளதால் இங்கு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடமான டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்காமல் தொடர்ந்து செயல்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களால், பணியாளர்களாகிய எங்களுக்கும் நோய் பரவும் அபாய நிலை உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 203 டாஸ்மாக் கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறோம்.

ஏற்கனவே டாஸ்மாக் பார்களை வருகிற 31-ந்தேதி வரை அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story