நகராட்சியில் லாரிகள் மூலம் தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்


நகராட்சியில் லாரிகள் மூலம் தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 24 March 2020 5:30 AM IST (Updated: 23 March 2020 11:43 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை நகராட்சியில் லாரிகள் மூலம் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

புதுக்கோட்டை,

நாடு முழுவதும் நேற்று முன்தினம் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் லாரிகள் மூலம் புதுக்கோட்டை கீழராஜவீதி பகுதியில் கிருமிநாசினி தெளித்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் லாரிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி பார்வையிட்டார். அப்போது அவர் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கவும், பொதுமக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முக கவசம் தயாரிக்கும் பணி

இதைத்தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவின் மூலம் முக கவசம் தயாரிக்கும் பணியினை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், முக கவசம் தயாரிக்கும் பணிகளை புதுக்கோட்டை, கீரனூர், விராலிமலை ஆகிய பகுதிகளில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் பயனாக ஒருவாரத்திற்கு சுமார் 50 ஆயிரம் எண்ணிக்கையிலான முக கவசங்கள் தயாரித்து புதுக்கோட்டை நகராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் கொரோனா வைரசில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பொதுஇடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதேபோன்று தனித்து இருப்பதையும் மேற்கொள்ள வேண்டும். இதன் பயனாக கொரோனா வைரசில் இருந்து தம்மையும், பிறரையும் பாதுகாக்க முடியும். எனவே பொதுமக்கள் பொதுஇடங்களுக்கு செல்லுதல் மற்றும் தேவையற்ற பயணங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றார்.

Next Story