ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கணவர், குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு


ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கணவர், குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 March 2020 10:30 PM GMT (Updated: 23 March 2020 6:30 PM GMT)

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கணவர், குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் நேற்று மனு அளிக்க வந்தவர்கள் தங்களது மனுக்களை, அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் போட்டு சென்றனர். இதற்கிடையே குன்னூர் அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்த கண்ணன், அவரது மனைவி நித்யா ஆகியோர் தங்களது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்திக்க போவதாக தெரிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.உடனே நித்யா, தான் கொண்டு வந்த டீசல் கேனை பையில் இருந்து வெளியே எடுத்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்புக்கு நின்றிருந்த பெண் போலீசார் அவரிடம் இருந்து டீசல் கேனை பிடுங்கி தடுத்து நிறுத்தினர். பின்னர் நித்யா கூறும்போது, தனது கணவர் முன்னாள் ராணுவ வீரர் என்றும், தங்களை வாழ விடாமல் ஊராட்சி பிரதிநிதிகள் தடுத்து வருவதாகவும், பலமுறை தொந்தரவு கொடுத்தது தொடர்பாக மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் தீர்வை தேடி வந்தோம் என்றும் தெரிவித்தார்.

பின்னர் கண்ணன் மற்றும் நித்யா ஆகியோரை போலீசார் உள்ளே அனுமதித்தனர். அவர்கள் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பாரதி நகரில் மாதத்துக்கு 2 முறை பேரட்டி ஊராட்சி மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். இல்லையென்றால் தண்ணீர் வழங்கமாட்டோம் என்று கூறுகின்றனர். இதுகுறித்து புகார் செய்தால் அருவங்காடு போலீசார் சமாதானமாக செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று முன்தினம் திடீரென எங்கள் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது தாக்குதலில் ஈடுபடுகின்றனர். எனவே குடிநீர் இணைப்பு வழங்குவதோடு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதுசம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story