31-ந்தேதி வரை வேலைநிறுத்தம்: நாகையில், ரூ.50 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு 1 லட்சம் மீனவர்கள் வேலை இழப்பு


31-ந்தேதி வரை வேலைநிறுத்தம்: நாகையில், ரூ.50 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு 1 லட்சம் மீனவர்கள் வேலை இழப்பு
x
தினத்தந்தி 24 March 2020 12:00 AM GMT (Updated: 23 March 2020 6:59 PM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வருகிற 31-ந்தேதி வரை மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நாகையில் 1 லட்சம் மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் ரூ.50 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்,

சீனாவில் உருவாகி இன்று உலகையே அச்சுறுத்தி கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய் தொற்றை கட்டுப் படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டு அரசு உத்தரவின் அடிப்படையில் மூடப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் வருகிற 31-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடுவையாற்று கரையில் நிறுத்திவைத்துள்ளனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுகம், மீன் ஏலக்கூடங்கள், மீன் மார்க்கெட்டுக்கள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஐஸ் தயாரிக்கும் நிறுவனங்களும் ஆட்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. நாகை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் விசைப்படகு மீனவர்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.

ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு

இதுகுறித்து இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திரநாட்டார் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தன. அதன் அடிப்படையில் நாகை மாவட்டத்தில் மீனவர்கள் வருகிற 31-ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை என முடிவு செய்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், 50 ஆயிரம் மீன்பிடி தொழில் சேர்ந்தவர்களும் வேலையிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வர்த்தகத்தை மீன்பிடி தொழில் ஈட்டி தருகிறது. எனவே மீனவர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக தொழில் முடக்கம் ஏற்பட்டு ரூ.50 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் மீனவர்கள், பொதுமக்களின் நலனுக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நாட்களில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மீனவர்களின் அத்தியாவசிய தேவை என்ன என்பதை அறிந்து அதனை பூத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story