உணவு பொருள் விற்பனை நிலையங்களில் இருமல், காய்ச்சல் உள்ளவர்களை பணியில் சேர்க்க கூடாது


உணவு பொருள் விற்பனை நிலையங்களில் இருமல், காய்ச்சல் உள்ளவர்களை பணியில் சேர்க்க கூடாது
x
தினத்தந்தி 24 March 2020 12:00 AM GMT (Updated: 23 March 2020 7:08 PM GMT)

உணவு பொருள் விற்பனை நிலையங்களில் இருமல், காய்ச்சல் உள்ளவர்களை பணியில் சேர்க்க கூடாது என மன்னார்குடி நகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.

மன்னார்குடி,

மன்னார்குடி நகராட்சியில் மன்னார்குடி நகர்பகுதியில் உணவு பொருட்கள் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் திருமலைவாசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடைகளுக்கு முன்பு கிருமி தொற்று நீக்கி மருந்து அல்லது சோப்பு திரவம் தண்ணீருடன் இருக்க வேண்டும். தரை பகுதியை பிளீச்சிங் பவுடர் கலந்த நீர் கொண்டு தினசரி இரு முறை (காலை மற்றும் மாலை) கழுவ வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் இருக்கைகள், மேஜைகள், படிக்கட்டுகள், கைபிடிகள் மற்றும் பொதுமக்கள் கை வைக்கக்கூடிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கூட்டம் கூடுவது தவிர்க்க வேண்டும்.

இருமல், காய்ச்சல்

கழிவறைகளை தினமும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள் அனைவரும் முககவசம், கையுறை, தொப்பி ஆகியவை அணிய வேண்டும். உணவு பொருள் விற்பனை நிலையங்களில் சளி, இருமல், காய்ச்சல் அல்லது தொற்றுநோய் அறிகுறி உள்ளவர்களை பணியில் சேர்க்க கூடாது. அவர்களை உரிய மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தள்ளுவண்டி கடைக்காரர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மன்னார்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் மணாழகன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பிரபாகரன், நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார், மன்னார்குடி ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சதீ‌‌ஷ்குமார், செயலாளர் பாரதிதாசன், அமைப்பு செயலாளர் எஸ்.எம்.டி.கருணாநிதி, நிர்வாகிகள் சங்கரசுப்பு, ராமகிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story