கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ராமேசுவரம் கோவில் ரத வீதிகளில் மஞ்சள் கலந்த கிருமிநாசினி தெளிப்பு


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ராமேசுவரம் கோவில் ரத வீதிகளில் மஞ்சள் கலந்த கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 24 March 2020 2:45 AM IST (Updated: 24 March 2020 1:40 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ராமேசுவரம் கோவில் ரத வீதிகளில்மஞ்சள் கலந்த கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ராமேசுவரம், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி மக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் கூடாமல் இருப்பதற்காக வருகின்ற 31-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு, அருங்காட்சியகம், நூலகம், ரெயில் நிலையம் மற்றும் அனைத்து சுற்றுலா இடங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ராமேசுவரம் கோவிலின் சன்னதி தெருவில் இருந்து நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மஞ்சள், வேப்ப இலை கலந்த கிருமிநாசினி நீரை தெளிக்க ஆரம்பித்தனர். சன்னதி தெருவில் தொடங்கி கோவிலின் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகளின் சாலைகளில் கிருமிநாசினி நீரான மஞ்சள் நீரை தெளித்தனர்.

கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் முகேஷ்குமார் தலைமையில் நகர் தலைவர் ராமகிருஷ்ணன், தாலுகா தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதே போல் தங்கச்சிமடத்தில் உள்ள குழந்தை இயேசு ஆலயம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முருகன் கோவில் சாலை, தர்கா பஸ்நிறுத்தம் வரை ரஜினி மக்கள் மன்றத்தினர் மஞ்சள் மற்றும் வேப்ப இலை கலந்த கிருமிநாசினி நீரை தெளித்தனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தொடர்ந்து ராமேசுவரத்தில் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் கோவிலின் ரதவீதி மற்றும் அக்னிதீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் நேற்று வழக்கம் போல் இயங்கினாலும், மக்கள் நடமாட்டம் அனைத்து பகுதிகளிலும் வழக்கத்தை விட குறைவாக இருந்தது.

Next Story